சென்னை: முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி மீதான வருமானத்தை மீறிய சொத்து சேர்த்தது தொடர்பான வழக்கின்   விசாரணை செப்.24-க்கு உயர்நீதிமன்றம் மதுரை தள்ளிவைத்துள்ளது.

கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் அப்போதைய பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி வருமானத்துக்கு அதிகமாக ரூ.7 கோடிக்கு சொத்து சேர்த்துள்ளதாகக் கூறி மதுரையைச் சேர்ந்த மகேந்திரன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையை தொடர்ந்து, நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், 3வது நீதிபதி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது. இதையடுத்து,  இந்த வழக்கு விசாரணை 3-வது நீதிபதியான எம்.நிர்மல்குமார் முன்பாக நடந்து வருகிறது.

இதற்கிடையில்,  ராஜேந்திரபாலாஜி தரப்பில், ”உச்ச நீதிமன்ற உத்தரவின்படி 2 நீதிபதிகள் கொண்ட அமர்வில் மாறுபட்ட தீர்ப்பு அளிக்கப்பட்டால், அந்த வழக்கை 2-க்கும் மேற்பட்ட நீதிபதிகள்தான் விசாரிக்க வேண்டும். 3-வது நபராக தனி நீதிபதி இந்த வழக்கை விசாரிக்க முடியாது என்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல” என வாதிடப்பட்டது.

இதற்கிடையில்,  இந்த வழக்கு நீதிபதி எம்.நிர்மல்குமார் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ராஜேந்திரபாலாஜி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் எம்.அஜ்மல்கான், ”உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனு செப்.20 அன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்” என்றார். அதையடுத்து நீதிபதி, இந்த வழக்கு விசாரணையை செப்.24-ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தர விட்டுள்ளார்.