டில்லி,
மோடி தலைமையிலான அமைச்சரவை நேற்ற விரிவாக்கம் செய்யப்பட்டது. 9 புதிய அமைச்சர் கள் பதவி ஏற்றனர்.
இந்நிலையில், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் உமாபாரதியின் பதவி பறிக்கப்படும் என்று டில்லி வட்டார தகவல்கள் வந்தது. அவரது உடல்நிலை காரணமாக அவர் செயல்படாத நிலையில் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் அவரது பதவி பறிக்கப்படாமல் ஆர்எஸ்எஸ் காப்பாற்றியுள்ள தகவல் வெளியாகி உள்ளது.
உ.பி. மாநிலத்தில் உள்ள ஜான்சி தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டவர் உமாபாரதி. அவர் மத்திய அமைச்சரவையில் கேபினட் அந்தஸ்தில் இருக்கிறார். அவரிடம் நீர்வளத்துறை, நதி மேம்பாடு, கங்கை சுத்திகரிப்பு, குடிநீர், துப்புரவு உள்ளிட்ட முக்கிய இலாகாக்கள் கொடுக்கப்பட்டு இருந்தன.
அவர் உடல்நிலை குன்றிய நிலையில் இருப்பதால், அவரை பதவியில் இருந்து நீக்க மோடி, அமித்ஷா கூட்டணி முடிவு செய்திருந்தது.
இதற்கிடையில், சமீபத்தில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதிய ஜனதாவின் தேசிய தலைவரான அமித்ஷாவிடம், ஆர்எஸ்எஸ் நிர்வாகிகள், உமாபாரதியை மாற்றக்கூடாது என்று கூறிவிட்டது.
இதையடுத்து, அவரை நீக்க முடியாத பாரதியஜனதா, அவரிடம் இருந்த முக்கிய இலாக்காக்கள், நிதின் கட்காரியிடம் அளிக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து உப்புக்குசப்பான குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு ஆகிய இலாகாக்கள் மட்டுமே உமா பாரதியிடம் கொடுக்கப்பட்டு, அவரது பொறுப்பு குறைக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக பேருக்கு அமைச்சராக உமாபாரதி செயல்படுவார் என தெரிகிறது.