சென்னை: ‘நீட்’ தேர்வு உள்பட பல தேர்வுகள் தனியார் கோச்சிங் சென்டர்கள் கொள்ளையடிக்கவே பயன்படுகின்றன என சென்னை பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில்  ஆளுநர் ஆர்.என்.ரவி முன்னிலையில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

சென்னை பல்கலைக்கழகத்தின் 164-வது பட்டமளிப்பு விழா இன்று காலை நடைபெற்றது. விழாவுக்கு வந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வரவேற்றார். இந்த விழாவில்  தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உயர்கல்வித்துறை அமைச்ச்ர பொன்முடி ஆகியோர் ஒரே  மேடையில் கலந்துகொண்டதுடன், மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

நிகழ்ச்சியில் பேசியி உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, “இந்தியாவின் தலைச் சிறந்த முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் உள்ளார். கல்வியும், சுகாதாரமும் இரு கண்கள் என உறுதியாக இருப்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ராஜகோபாலச்சாரி, சர்வபள்ளி டாக்டர் ராதா கிருஷ்ணன், சஞ்சீவ ரெட்டி, வி.வி.கிரி, அப்துல்கலாம் உள்ளிட்ட 5 குடியரசுத் தலைவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தில் பயின்றவர்கள் என அமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

நீட் மசோதாவை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்த ஆளுநருக்கு நன்றி .கல்வி மாநில உரிமையில் இருக்க வேண்டும் என்பதை ஆளுநரிடம் கோரிக்கையாக வைத்திருக்கிறேன் என்று கூறினார். மேலும்,  நீட் உள்ளிட்ட எந்த தேர்வாக இருந்தாலும், தனியார் பயிற்சி நிறுவனங்கள் கொள்ளை அடிப்பதற்குதான் அவை வழி வகுக்கும்.  நீட் போன்று நுழைவுத் தேர்வுகள் மாணவர்களுக்கு பயனளிக்காது . 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மருத்துவம் உள்ளிட்ட பட்டப்படிப்புகளில் சேர வேண்டும்.பி.ஏ, பி.எஸ்.சி படிப்புகளில் சேரவும் நுழைவுத் தேர்வு இருக்கக் கூடாது மாநிலத்தின் உரிமையாக கல்வி இருந்தால் பல்கலைக்கழகங்களில்  கல்வி இன்னும் வளரும் ; அதனால் தான் மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்கிறோம்” என்றார்.   மாணவர்கள் தங்களுக்கான எதிர்காலத்தில் சமூக நீதிக் கொள்கையுடன் செயல்பட வேண்டும்.

இவ்வாறு கூறினார்.