சென்னை: அமைச்சர் நேரு மீது ஊழல் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அமலாக்கத்துறையின் அச்சுறுத்தல்களுக்கு பயப்பட மாட்டார் அமைச்சர் நேரு என திமுக சட்டத்துறை செயலாளர் ஆலந்தூர் பாரதி தெரிவித்து உள்ளார்.

அரசு வேலைக்கு பணம் வாங்கியதில் ரூ.888 கோடி ஊழல் செய்துள்ளதாக, அமைச்சர் கே.என்.நேருமீது வழக்கு பதிவு செய்ய அமலாக்கத்துறை, தமிழ்நாடு அரசுக்கு அனுப்பிய மனுமீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்திய அதிமுக மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஊழலுக்கான முகாந்திரம் உள்ளதால், நேருமீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ்.பாரதி, இந்த உத்தரவு ஒன்றும் பின்னடைவு அல்ல, திமுகவின் சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு நகராட்சி நிர்வாகத்துறையில் பணி நியமனம் தொடர்பாக லஞ்சம் பெற்றதாகவும், இதன்மூலம் ரூ.888 கோடி ஊழல் நடைபெற்றுள்ளது என்றும், இந்த துறையில் டெண்டர் ஒதுக்கீட்டில் ரூ.1,020 கோடி ரூபாய் முறைகேடு செய்யப்படதாகவும் கூறி அமலாக்கத்துறை அமைச்சர் கே.என். நேருவுக்கு எதிராக தமிழ்நாடு டிஜிபியிடம் வழக்கு பதிய கோரி கடிதம் எழுதியிருந்தது.
அமலாக்கத்துறையின் இந்த கடித்தத்தின் அடிப்படையில் அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவு செய்யக் கோரி அதிமுக எம்.பி. இன்பதுரை மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் ஆதி நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கின் விசாரணை இன்று சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அமர்வு முன் வந்தது. இன்றை விசாரணையில் இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், ‘வழக்கு பதியாமல் காலம் தாழ்த்துவது ஏன் எனவும், இந்த விவகாரத்தில் அமைச்சர் கே.என். நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை உடனடியாக வழக்குப்பதிவு செய்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்’ எனவும் உத்தரவிட்டுள்ளனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவை சுட்டிக்காட்டி அதிமுக, பாஜக, தவெக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் அமைச்சர் நேருவையும், திமுக அரசையும் கடுமை யாக விமர்சித்து வருகின்றன.
இந்த வழக்கு குறித்தும் உயர் நீதிமன்றத்தின் உத்தரவு குறித்தும் திமுக சார்பில் அக்கட்சியின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ். பாரதி விளக்கம் கொடுத்துள்ளார்.
சென்னை அண்ணா அறிவாலயத்தில் அமைச்சர் நேரு மற்றும் ஆர்.எஸ். பாரதி இருவரும் சென்னை அண்ணா அறிவாலயத்தில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது, “கே.என். நேரு அவர்களைக் கட்சியின் மூத்த தலைவர் என்றோ கழகத்தின் முதன்மைச் செயலாளர் என்றோ கூடப் பார்க்காமல் உடனடியாக லஞ்ச ஒழிப்புத் துறை மூலம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டார். தற்போது அந்த விசாரணை நடைபெற்று வருகிறது.
அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் இன்பதுரை தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தமிழ்நாடு அரசு ஏற்கனவே விசாரணை நடத்திக் கொண்டிருப்பதைக் கருத்தில் கொண்டு, முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்ய உத்தரவிட்டுள்ளது. இது ஒன்றும் பின்னடைவு அல்ல, திமுகவின் சட்டத்துறை இதனைச் சட்டரீதியாகச் சந்தித்து முறியடிக்கத் தயாராக இருக்கிறது.
கே.என்.நேரு மீது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா பல வழக்குகளை தொடுத்திருக்கிறார். அத்தனை வழக்குகளையும் எதிர்கொண்டு வென்று காட்டியவர்தான் நேரு. பாஜக அரசு சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையை அரசியல் ரீதியாகப் பயன்படுத்தப்படுகிறது. முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப. சிதம்பரத்தை நள்ளிரவில் கைது செய்து 100 நாட்கள் சிறையில் வைத்தும், மூன்று ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லை. கடந்த 2016-ல் லாரிகளில் பிடிபட்ட 570 கோடி ரூபாய் வழக்கில் 10 ஆண்டுகள் ஆகியும் சிபிஐ இதுவரை முதல் தகவல் அறிக்கையைக் கூடப் பதிவு செய்யவில்லை.
இவை அனைத்தும் தேர்தல் நேரத்தில் முதலமைச்சர் மற்றும் திமுகவின் இமேஜைக் கெடுப்பதற்காகச் செய்யப்படும் சூழ்ச்சிகள். அமைச்சர் நேரு தற்போது 41 தொகுதிகளுக்குப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது தேர்தல் பணியைப் பார்த்துப் பொறாமைப்பட்டு எடப்பாடி பழனிசாமியின் ஆலோசனையின் பேரில் டெல்லியில் இருப்பவர்கள் இத்தகைய நடவடிக்கைகளை எடுக்கிறார்கள். ஆனால் அமைச்சர் இத்தகைய அச்சுறுத்தல்களுக்குப் பயப்பட மாட்டார்; தட்டத் தட்ட பந்து எழும்புவது போல இன்னும் தீவிரமாகப் நேரு பணியாற்றுவார்” எனத் தெரிவித்தார்.
ரூ.888 கோடி ஊழல்: அமைச்சர் நேரு மீது வழக்கு பதிவுசெய்ய லஞ்ச ஒழிப்புதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு
[youtube-feed feed=1]