சென்னை: அம்மா மினி கிளினிக்கில் குழந்தைகளுக்கான சிகிச்சை அளிக்கப்பட்டதா? என  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை, சைதாப்பேட்டையில் இந்தியாவிலேயே முதியவர்களுக்கான முதல் மருத்துவமனை தொடங்கப்பட உள்ளது என்றும் கூறினார்.

சமீபத்தில், போலி மருத்துவரிடம் சிகிச்சை பெற்ற ஏழை பெண் குழந்தை பரிதாபம் உயிரிழந்தது. இதுகுறித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் விடியா அரசு, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அம்மா மினி கிளினிக் திட்டத்தை மூடியதால், இதுபோன்ற இழப்புகள் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டினார். மேலும், தான் பிடித்த முயலுக்கு மூன்றே கால்கள்தான் என்று வீம்பு பிடிக்காமல், அம்மாவின் அரசு கொண்டு வந்த அம்மா மினி கிளினிக் திட்டத்தை முழுமையாக மீண்டும் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி இருந்தார்.

இந்த நிலையில், எடப்பாடியின் கேள்விக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில் அளித்தார். சைதாப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு 2.5 கோடி மதிப்பீட்டில் 14 டயாலிசிஸ் கருவிகள் வழங்கும் நிகழ்ச்சி இன்று மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்துகொண்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர்,  சென்னை, சைதாப்பேட்டையில் புதிய மருத்துவமனை கட்டடப் பணிகளுக்கு  ரூ. 40 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த மருத்துவமனையானது, இந்தியாவிலேயே முதியவர்களுக்கான முதல் மருத்துவமனை என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர், கடலூரில் போலி மருத்துவர் சத்யசீலன் என்பவர் சிகிச்சை கொடுத்து 5 வயது குழந்தை இறப்பு தொடர்பாக, மினி கிளினிக் இருந்தால் இச்சம்பவம் நடந்திருக்காது என விமர்சித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பதில் கூறியவர், சத்யசீலன் என்ற போலி மருத்துவர், தஞ்சையிலும், எழும்பூரிலும் மருத்துவ படிப்பை முடித்த மற்றொரு சத்யசீலன் என்ற மருத்துவரின் சான்றிதழை வைத்து, புகைப்படத்தை மட்டும் மாற்றி போலி சான்றிதழ்களை கொண்டு ஐந்து வருடங்களாக மருத்துவமனையை நடத்தி வந்துள்ளார்.

திமுக ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் தான் ஆகிறது. தகவல் தெரிந்தவுடன் நடவவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சியில் 4 ஆண்டுகள் போலி சான்றிதழ் மூலம் மருத்துவமனையை சிறப்பாக நடத்தி வந்துள்ளார் என கூறினார், அப்பொழுது, குழந்தைகளுக்கான மருத்துவ சேவை அம்மா கிளினிக்கில் இருந்தத்தா? ஓராண்டுக்கான பணி என்று எழுதி வாங்கி கொண்டு தான் மருத்துவர்கள் பணி நியமனம் செய்யப்பட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.