ஸ்ரீவில்லிபுத்தூர்

விருதுநகர் மாவட்ட நீதிமன்றம் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் உள்ளிடோரை சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து விடுவித்துள்ளது.

முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் வருமானத்திற்கு அதிகமாகச் சொத்து சேர்த்ததாக தற்போதைய வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமச்சந்திரன்,  அவரது மனைவி மற்றும் தொழிலதிபர் சண்முக மூர்த்தி ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறை காவல்துறையினர் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள விருதுநகர் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 27ம் தேதி நீதிபதி கிறிஸ்டோபர் முன்னிலையில் கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன் நேரில் ஆஜரானார்.

மீண்டும் கடந்த டிசம்பர் 22ம் தேதியும் வழக்கு விசாரணை நடைபெற்றது.  விசாரணையில் அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக தங்கள் மீது அவதூறு பரப்பும் வகையில் வழக்கு தொடரப்பட்டது எனவும் தன் மீதான குற்றச்சாட்டுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனவும் அமைச்சர் தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.

கடந்த ஜூன் 27ம் தேதியும் விசாரணை நடைபெற்று இரு தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது. இன்று இவ்வழக்கில் இன்று தீர்ப்பளித்த விருதுநகர் மாவட்ட நீதிமன்றம், அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் உள்ளிட்ட 3 பேரையும் வழக்கில் இருந்து விடுவித்து உத்தரவிட்டது.