டில்லி
காஷ்மீர் மாநிலத்தில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் மேலும் தொடரும் என வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மோடி அரசால் விதி எண் 37 விலக்கப்பட்டு காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து விலக்கப்பட்டது. அத்துடன் மாநிலம் இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டது. இதன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதற்கு முன் தினத்திலிருந்து மாநிலம் எங்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கடந்த இரு மாதங்களாகப் பல எதிர்க்கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப் பட்டுள்ளனர். அத்துடன் பல இடங்களில் ஊரடங்கு சட்டம் உள்ளிட்ட கட்டுப்பாடு நடவடிக்கைகள் தொடர்ந்து வருகிறது. இதற்கு கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. பல ஊடகங்கள் கோரிக்கை விடுத்தும் மத்திய அரசு கட்டுப்பாடுகளை விலக்கவில்லை.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் அமெரிக்க அறிஞர்கள் குழுவான திட்டம் மற்றும் சர்வதேச கல்வி மையக் கூட்டம் ஒன்றில் கலந்துக் கொண்டார். அப்போது அவர், “காஷ்மீர் மாநிலத்தில் இணையம், தொலை தொடர்பு உள்ளிட்டவை தடை செய்யப்பட்டதற்கு முக்கிய காரணம் தவறான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதே ஆகும்.
சமூக வலி தளங்கள் மற்றும் இணையத்தின் மூலம் பலர் மக்களை திசை திருப்பி வருகின்றனர். மேலும் இதனால் உயிர்ச் சேதம் ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே மக்களின் உயிரைக் காக்க இந்த கட்டுப்பாடு விதிப்பது தொடர உள்ளது. மக்கள் மனதிலும் மாநில நிலையிலும் முழுமையான மாறுதல் உண்டானதைத் தெரிந்துக் கொண்ட பிறகு இந்த கட்டுப்பாடுகள் நீக்கப்படும்.
தற்போதுள்ள நிலையில் பாகிஸ்தான் காஷ்மீரில் பிரச்சினைகள் உண்டாக்க கடந்த 70 ஆண்டுகலாக நேரம் பார்த்துக் கொண்டு இருக்கிறது. இப்போது கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டால் பாகிஸ்தானின் சதித் திட்டங்கள் அப்பகுதியில் அரங்கேற வாய்ப்புண்டு.” எனத் தெரிவித்துள்ளார்.