ஈரோடு:

மாணவிகள் விடுதியில் இரவு நேரத்தில் திடுமென அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன், ஆய்வு செய்ததால், மாணவிகள் சங்கடத்துக்கு உள்ளானார்கள்.

ஈரோடு வ.உ.சி. விளையாடு அரங்க வளாகத்தில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாணவிகள் விளையாட்டு விடுதி உள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவிகள் 101 பேர்  இங்கு தங்கி படித்துவருகிறார்கள்.

நேற்று குடியரசு தினம் என்பதால், நேற்று முன்தினம் இரவு விடுதியில் நடைபெறும் விழாவுக்கான ஏற்பாட்டை மாணவிகள் செய்து வந்தனர். அப்போது  சுமார் 11 மணிக்கு தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் மா.பா.பாண்டியராஜன், திடீரென அந்  விடுதிக்கு சென்றார். குடியரசு தின விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். பிறகு  மாணவிகளிடம், `தேசிய அளவிலான போட்டிகளில் அதிகளவில் பங்கேற்று பதக்கங்களை பெற வேண்டும்’ என தெரிவித்தார்.  அவருடன்அமைச்சர் கே.சி.கருப்பணன், கலெக்டர் பிரபாகர் உட்பட பலர் இருந்தனர்.

அப்போது இரவு நேரம் என்பதால், மாணவிகள் நைட்டி மற்றும் சாதாரண உடையே அணிந்திருந்தனர். ஆகவே அமைச்சரின் முன் வர தயக்கம் காட்டினர். ஆனால் இதை உணராத அதிகாரிகள், மாணவிகளை, அமைச்சர் முன் கொண்டுவந்து நிறுத்தி உள்ளனர். அமைச்சரும், மாணவிகளுடன் உரையாடி சென்றார்.

அமைச்சரின் இந்த ராத்திரி ரவுண்ட்ஸ்அப் குறித்து பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகின்றனர்.

இதே போல கடந்த மார்ச் மாதம்,விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் சுந்தர்ராஜன் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட விளையாட்டு விடுதியில் நள்ளிரவில் புகுந்து ஆய்வு என்ற பெயரில் அங்குள்ள மாணவிகளிடம் அநாகரீகமான முறையில் நடந்து கொள்ளும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின. அப்போது அவர் மதுபோதையில் இருந்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

அந்த வீடியோ காட்சியில்,  மாணவிகளை வரிசையாக நிறுத்தி வைத்த அமைச்சர் சுந்தரர்ராஜன், அக்குழந்தைகளின் ஆடைகளை தொட்டும், இழுத்தும் வக்கிரமாக கிண்டல் செய்தபடியே பேசுகிறார். ஒரு மாணவியின் இடுப்பைத் தொட்டு மேலாடையை இழுக்கும் அமைச்சர்,‘‘ உன்னிடம் எத்தனை சட்டைகள் உள்ளன. உன் பெட்டியை திறந்து பார்க்கலாமா?’’ என்று ஆய்வுக்கு சற்றும் சம்பந்தம் இல்லாத கேள்வியை கேட்கிறார்.

அடுத்ததாக, ஒரு மாணவியைப் பார்த்து,‘‘ உன்னைப் பார்த்தால் ஹாக்கி விளையாடுபவரைப் போல தெரியவில்லையே?’’ என்கிறார். உன எடை கூடியிருப்பது உன் தாய்க்கு தெரியுமா? என அமைச்சர் கேட்டதும், ‘‘இல்லை, எனது தந்தைக்கு தான் தெரியும்’’ என்று அந்த மாணவி கூறுகிறார். அதற்கு ‘‘அப்படியானால் உங்க அம்மா உங்க அப்பா கூட இல்லையா?’’ என அமைச்சர் வக்கிரமாக கேட்கிறார்.

மற்றொரு மாணவி தனது தந்தை இறந்து விட்டதாக கூறுகிறார். அதைக் கேட்ட அமைச்சர்,‘‘ உங்க அப்பா இறந்துட்டாரா அல்லது வெளியில் ஓடி travelling போய்விட்டாரா?’’என கொச்சையாக கேட்கிறார். அமைச்சரின் கேள்விகளை எதிர்கொள்ள முடியாத மாணவிகள் அவமானத்தில் தலை குனிகின்றனர்.

ஆனால் இது போன்ற சம்பவம் ஏதும் தற்போது நடக்கவில்லை என்றாலும், இரவு நேரத்தில் மாணவயிர் விடுதிக்குச் சென்று ஆய்வு என்ற பெயரில் அவர்களை சங்கடப்படுத்துவதை அமைச்சர்கள் தவிர்க்கவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுள்ளது.