சென்னை: வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்களுக்காக புதிய செயலியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் அறிமுகம் செய்தார்.

சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான், சென்னை கலைவாணர் அரங்கில் 11.01.2023 மற்றும் 12.01.2023 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும், “அயலகத் தமிழர் தின விழாவில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது பெயரினை பதிவு செய்யும் பொருட்டு அதற்கான வசதியினை அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தின் வலைதளத்தில் சேவையை தொடங்கி வைத்தார். தொடர்ந்து, வெளிநாடுகளுக்கு தமிழகத்தில் இருந்து வேலை பார்க்க செல்பவர்கள் பதிவு செய்வதற்கான செயலியை வெளிநாட்டு வாழ் தமிழர் துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் செந்தில் மஸ்தான் இந்த செயலி மூலம் தவறான ஏஜென்சிகள் மூலம் வெளிநாடுகளுக்கு சென்று பலர் சிக்கிக் கொள்வதில் இருந்து காத்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.  மேலும், இந்த செயலி வெளிநாடுகளுக்கு செல்வது மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்றும் வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்ல விரும்புபவர்கள் இந்த செயலியில் பதிவு செய்தபின் செல்ல வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தினார்.

“வெளிநாடுகளுக்கு வேலைக்கு செல்பவர்கள் எச்சரிக்கையோடும், விழிப்புணர்வோடும் இருக்க வேண்டும் என்று எச்சரித்துள்ள அமைச்சர்,  வேலைக்குச் சென்ற இடத்தில் தவறான பணிகளை செய்ய வற்புறுத்துவதால் தான் அவர்கள் அந்த வேலையை விட்டு வர வேண்டிய சூழல் ஏற்படுகிறது. அந்த அடிப்படையில் கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 64 நபர்களை கம்போடியா, மியான்மர் ஆகிய நாடுகளில் இருந்து மீட்டு வந்துள்ளோம். அங்கே வேலை தேடி சென்று பல இன்னல்களுக்கு ஆளான இவர்களுக்காக விமான கட்டணம் தொடங்கி அனைத்து செலவுகளையும் அரசே ஏற்று, மேலும் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிகாட்டுவதற்கான விழிப்புணர்வையும் உருவாக்கி வருகிறோம் என்று கூறினார்.