பெங்களூர்:

பெங்களூரிலிருந்து உத்தரபிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்ற ஆயிரத்து இருபத்தொரு புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்கள் பயணத்திற்காக 800 முதல் 1,000 ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பயணத்தின் மொத்த செலவையும் அரசாங்கங்கள் ஏற்கும் என்று மத்திய அரசு கூறி ஒரு நாளே ஆகிய நிலையில் இந்த கட்டண வசூலை கர்நாடக அரசு செய்துள்ளது.

இதுகுறித்து சுகாதார அமைச்சக இணைச் செயலாளர் லாவ் அகர்வால் தெரிவிக்கையில், மாநிலங்களிடமிருந்து வழங்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில், சிறப்பு ரயில்களை இயக்க அனுமதி வழங்கப்பட்டது. இது இந்திய அரசாக இருந்தாலும், ரயில்வேயாக இருந்தாலும் சரி, நாங்கள் தொழிலாளர் களிடமிருந்து கட்டணம் வசூலிப்பது பற்றி பேசவில்லை. போக்குவரத்து செலவில் எண்பத்தைந்து சதவீதம் ரயில்வேயால் ஏற்கப்படுகிறது, அதே நேரத்தில் மாநிலங்கள் 15 சதவீத செலவை ஏற்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

காவல் துறை எங்கள் வீடுகளுக்கே வந்து டிக்கெட்டுகளை கொடுத்தது. பின்னர் டிக்கெட்களுக்கான கட்டணமாக 1000 ரூபாய் பெற்று கொண்டு, எங்களை சிக்கபனவர ரயில் நிலையத்தில் இறக்கி விட்டனர் என்று அசாம்கரில் வசிக்கும் தினேஷ் யாதவ் கூறினார்.

ரயிலில் இருந்து வந்த மற்றொரு பயணி கரண் குமார் கூறுகையில், அவர்கள், என்னிடமிருந்து 1,000 பெற்று கொண்டனர் என்று கூறினார்.