விசாகப்பட்டினம்

விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் ஒரு குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிர் இழந்து 1000 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

ஆந்திர பிரதேச மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் நாயுடு தோட்டா அருகே ஆர் ஆர் வெங்கடாபுரம் என்னும் ஊர் உள்ளது.  இங்கு ஒரு ரசாயன ஆலை அமைந்துள்ளது.  இந்த ஆலையில் இன்று அதிகாலை சுமார் 3 மணிக்கு திடீர் என வாயுக் கசிவு ஏற்பட்டுள்ளது.  இதனால் அருகில் உள்ள கிராமத்தினருக்கு முச்சுத் திணறல், கண் எரிச்சல், மயக்கம், அரிப்பு உள்ளிட்டவை ஏற்பட்டுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்ததும் காவல்துறையினர் மற்றும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்துள்ளனர்.  வாயுக் கசிவால் ஒரு குழந்தை உள்ளிட்ட நால்வர் மரணம் அடைந்துள்ளதாகவும் சுமார் 1000 பேருக்குப் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.   ஆர் ஆர் வெங்கடாபுரம் பகுதியில் உள்ள 5 கிராம மக்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.

இந்த வாயுக் கசிவுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.   காவல்துறையினர் இது குறித்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.  ஏற்கனவே கொரோனா வைரஸால் தினமும் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு வருகையில்  ஆந்திராவில் வாயுக் கசிவு பாதிப்பும் சேர்ந்து மக்களை அச்சுறுத்தி உள்ளது.