முசாபர்பூர்

ஷார்மிக் ரயிலில் பயணம் செய்த புலம்பெயர் தொழிலாளியின் குழந்தை பால் கிடைக்காமல் முசாபர்பூர் ரயில் நிலையத்தில் இறந்துள்ளது.

பீகார் மாநிலம் சமர்ப்பன் மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூரை சேர்ந்த மக்சூத் ஆலாம் என்பவர் தனது மனைவி ஜீபா மற்றும் நான்கரை வயது மகன் இஷாக் ஆகியோருடன் டில்லியில் வசித்து வந்தார்.   இவர் வீட்டுக்கு வண்ணம் அடிக்கும் தொழிலைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.  ஊரடங்கால் பணி இழந்த அவர் குடும்பம் பணமின்றி உணவுக்கும் அலைய நேர்ந்தது.  இதனால் சொந்த ஊருக்குச் செல்ல அலாம் முடிவு செய்தார்.

தன்னிடம் இருந்த பொருட்கள் அனைத்தையும் விற்று ரயில் மூலம் தனது குடும்பத்துடன் அலாம் பீகாருக்குப் பயணம் ஆனார்.   திங்கள் அன்று தாம் சொந்த ஊருக்குச் சென்று ரம்ஜானைக் கொண்டாடலாம் என ஆர்வத்துடன் பயணம் செய்த அலாமுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.  அதிக வெப்பம் காரணமாக இஷாக் நோய்வாய்ப்பட்டான்.

அந்த ரயில் முசாபர்பூர் ரயில் நிலையத்தை அடையும் போது  உணவு நீர் இன்றி இஷாக் வாடி உள்ளான்.  அவனுக்குச் சிறிது பால் கிடைக்குமா என அலாம் ரயில் நிலையம் எங்கும் அலைந்து திரிந்து தேடி உள்ளார்.   எங்கும் பால் கிடைக்கவில்லை.   அதிகாரிகள் சிலர் எங்கிருந்தோ பால் கொண்டு வந்து அளித்த போது இஷாக் உயிர் பிரிந்திருந்தது.   ரம்ஜானைக் கொண்டாட வந்த எங்கள் குழந்தையை இறைவன் அவருடன் அழைத்துக் கொண்டார் என பெற்றோர் கதறியது பார்ப்பவர் மனதை உருக்கியது.

இது குறித்து ரயில்வே காவல்துறை சூப்பிரண்ட் ரமாகாந்த் உபாத்யாய், “இந்த குழந்தை வெகு நாட்களாகவே நோய்வாய்ப்பட்டுள்ளது.   ரயிலில் ஏறும் போதே மோசமான உடல் நிலையில் இருந்துள்ளது.  அவர்கள் வந்த ரயில்  தானாபூர் நிலையத்தில் இருந்து சிதாமார்கிக்கு முசாபர்பூர் வழியே செல்லும் ரயில் ஆகும்.   ரயில் நிலையத்தை அடையும் முன்பே குழந்தை இறந்து விட்டது. இதைப் பெற்றோர்கள் அறியவில்லை” எனத் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே முசாபர்பூர் ரயில் நிலையத்தில் ஒரு பெண் உடல்நலம் குன்றி மரணம் அடைந்து அதை அறியாத அவருடைய சிறு குழந்தை தாயின் உடல்மீது இருந்த போர்வையை இழுத்து விளையாடிய துயர நிகழ்வு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.