டில்லி

பிரபல கிரிக்கெட் வீரர் தோனி விளையாட்டில் இருந்து ஓய்வு பெற உள்ளதாக வந்த தகவலை அவர் மனைவி சாக்‌ஷி மறுத்துள்ளார்.

பிரபல கிரிக்கெட் வீரரான தோனி ரசிகர்களின் பேராதரவை இன்னும் பெற்று வருகிறார்.   சமீப காலங்களாக அவர் போட்டிகளில் சரியாக விளையாடாதது அவர் ரசிகர்களுக்கு மனத் துயரை உண்டாக்கியது.  அத்துடன் அடுத்தடுத்து சில போட்டிகளில் அவர் இடம்பெறாமல் இருந்தது  பல சர்ச்சையைக் கிளப்பியது.  இந்த சர்ச்சைக்கு முற்றுப் புள்ளி வைப்பது போல் அவர் ஐபிஎல் 2020 போட்டிகளில் முன்னிறுத்தப்பட்டார்.

இந்த போட்டிகளில் அவர் விளையாட்டைப் பொறுத்து அவர் கிரிக்கெட் எதிர்காலம் அமையும் எனக் கூறப்பட்டது.  ஆனால் கொரோனா பரவுதல் மற்றும் ஊரடங்கு கரணமாகக் காலவரையின்றி ஐ பி எல் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டன.  அடுத்து நடைபெற இருந்த டி 20 உலகக் கோப்பை போட்டிகளும் கொரோனா தொற்று அச்சுறுத்தலால் ஒத்தி வைக்கப்படும் என எதிர்பார்க்க்ப்படுகிரது.

இதையொட்டி நேற்று மாலை ஒரு சில டிவிட்டர் ப்ய்னாளிகள் தோனி கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக ஹேஷ்டாக்குடன் செய்திகளைப் பகிர்ந்தனர்.    இது கிரிக்கெட் ரசிகர்களிடையே கடும் பரபரப்பை உண்டாகியது.  ஆனால் ஒரு சில கிரிக்கெட் ரசிகர்கள் இது வதந்தி எனவும் இதை நம்ப வேண்டாம் எனவும் தொடர்ந்து பின்னூட்டம் இட்டனர்.

இது குறித்து தோனியின் மனைவி சாக்‌ஷி தனது டிவிட்டரில், “இது வெறும் வதந்தி ஆகும்.   மக்களை ஊரடங்கு மனதளவில் நிலை தடுமாறச் செய்துள்ளது.’  எனப் பதிந்து இந்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்   ஆனால் ஒரு சில நிமிடங்களில் இந்த டிவிட்டை சாக்‌ஷியே நீக்கி உள்ளார்.

இவ்வாறு சாக்‌ஷி டிவிட்டரில் பதிவது முதல் முறையல்ல. கடந்த வருடம் செப்டம்பர் மாதம் தோணியைக் குறித்து வந்த செய்திகளை வதந்திகள் என டிவீட் செய்து மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.