டெல்லி:
புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. பயணத்தின்போது, அவர்களுக்கான உணவுகளை ரயில்வே வழங்க வேண்டும் என்று உச்சநீதி மன்றம் கூறி உள்ளது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கால் நாடு முழுவதும் கோடிக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.  அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்வ தில் மத்திய மாநில அரசுகள் மெத்தனம் காட்டியதால், பல மாநிலங்களில் இருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் உணவுக்கே வழியின்றி தங்களது சொந்த ஊரை நோக்கி படையெடுத்துச் செல்கின்றனர்.
ஏராளமானோர் நடை பயணமாக பல நுறு கிலோ மீட்டருக்கு நடந்து சென்றுகொண்டிருக்கும் நிலை, நாட்டு மக்களிடைய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது தொடர்பாக மத்திய மாநில அரசுகள் மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
அதையடுத்து மத்தியஅரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்காக ஷராமிக் ரயில்களை இயக்கியது. ஆனால், அதிலும் கட்டணக் கொள்ளை அடிக்கப்பட்டால், தொழிலாளர்கள் பெரும் அவதிக்குள்ளாக்கி வருகின்றனர்.
இதுகுறித்து உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்குகளை இன்று விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் தலைமையிலான பெஞ்ச்,  இதுகுறித்து மத்திய, மாநில அரசுகள் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உத்தர விட்டனர்.
மேலும்,  புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை யார் ஏற்பது என்பதை மத்தியஅரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று  கூறியது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு வழக்கறிஞர்,  தொழிலாளர்களிடம் ரயில்  கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை, ரயில்வே அமைச்சகம் டிக்கெட் கட்டணத்தில் 85% மற்றும் மாநில அரசுகள் செலுத்துகின்றன   என்று விளக்கினார்.

தற்போதைய நிலையில், புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் செலவை அவர்கள் புறப்படும் மாநிலமோ அல்லது அவர்கள்  சென்று சேரும் மாநிலமோ ஏற்கின்றன.  ரயில் பயணத்தின்போது உணவு மற்றும் குடிநீர்  ரயில்வே சார்பில் வழங்கப்படுகிறது என்று கூறியது.

மே 1 முதல் 27 வரை 97 லட்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை – 50 லட்சம் ஷ்ராமிக் ஸ்பெஷல்களாலும், 47 லட்சம் சாலை வழியாகவும் அனுப்பியுள்ளதாகவும்,  இவர்களில் 80 சதவீதம் பேர் உத்தரபிரதேசம் மற்றும் பீகாரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து,  உத்தரவிட்ட நீதிபதிகள்  புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரயில் பயண கட்டணத்தை வசூலிக்கக்கூடாது என்றும்,  அவர்களுக்கான உணவுகளை சம்மந்தப்பட்ட மாநில அரசுகள் கொடுக்க வேண்டும் என்றும்,  ரயிலில் பயணம் செய்யும் போது, தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை ரயில்வேத்துறை வழங்க வேண்டும் என்று  தெரிவித்துள்ளது.
ஏற்கனவே புலம்பெயர் தொழிலாளர்கள் தொடர்பான வழக்கில்,  டெல்லி உயர்நீதி மன்ற நீதிபதிகள் எஸ் கே கவுல் மற்றும் எம் ஆர் ஷா ஆகியோரைக் கொண்ட பெஞ்ச், புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் பதிவை மாநிலங்கள் மேற்பார்வையிடுவதோடு, அவர்கள் விரைவாக ரயில் அல்லது பேருந்தில் ஏறுவதை உறுதி செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.