ஈரநில பாதுகாப்பு மற்றும் மேலாண்மையை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட தமிழ்நாடு மாநில ஈரநில ஆணையம் தமிழகத்தில் உள்ள 42000 க்கும் மேற்பட்ட ஈரநிலங்களை பாதுகாத்து வருகிறது.
இதில், முதல்கட்டமாக 141 ஈரநிலங்களை மேம்படுத்த தேவையான நடவடிக்கை குறித்து ஆய்வு செய்து வருகிறது. இது குறித்து ஆய்வு மேற்கொண்ட சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் கடந்த மூன்றாண்டுகளில் 80 ஈரநிலங்கள் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
ரூ. 4,386.6 கோடி ரூபாய் ஆண்டு மதிப்புள்ள இந்த 80 ஈரநிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகள் மற்றும் கட்டுமான பணிகள் ஆகியவற்றை அகற்றுதல், கழிவுகளை கொட்டுதல் மற்றும் மாசுபடுவதை தவிர்ப்பது மற்றும் அதிகப்படியான நீரை உறிஞ்சுவது ஆகியவற்றை கண்காணிப்பது மற்றும் தவிர்ப்பதன் மூலம் இந்த மதிப்பு ஆண்டுக்கு சுமார் ரூ. 17,000 அளவுக்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
மீன்பிடித்தல், பயோ பியூயல், மரபணு பொருள் மற்றும் நன்னீர் பயன்பாடு ஆகியவற்றின் அளவீடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டில் இந்த ஈரநிலங்களின் முழுத்திறனை கொண்டு ஆண்டுக்கு ரூ. 17,467.9 கோடி மதிப்பிலான பயனை பெறமுடியும் என்று சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
32 கிராமங்களைச் சேர்ந்த 10,000 க்கும் மேற்பட்ட மீனவர்களின் வாழ்வாதாரமாக விளங்கும் பழவேற்காடு ஏரியில் தற்போது மீன்பிடி தொழில் மூலம் நாளொன்றுக்கு சராசரியாக ஒரு நபருக்கு 1000 ரூ. வரை கிடைத்து வரும் நிலையில், இந்த ஏரியை பராமரிப்பதன் மூலம் இதன் ஆண்டு மதிப்பு ரூ. 1,133 கோடி அளவுக்கு உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
இவை தவிர, வீராணம், சோழவரம், வேளச்சேரி, கொரட்டூர், பள்ளிக்கரணை உள்ளிட்ட 80 ஈரநிலங்களை மீட்க சுமார் 203 கோடி செலவாகும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த ஈரநிலங்களை மீட்பதன் மூலம் பொருளாதார ரீதியாக மதிப்பு உயரும், இந்த நிலங்களின் மதிப்பை பொருளாதார ரீதியாக உயர்த்த முறையான வழிமுறைகள் இல்லை. இந்த ஏரி மற்றும் நீர்நிலைகளின் மூலம் பயன்பெறும் அனைத்து தரப்பினருக்கும் சேவைக்கான விலை குறியீட்டை நிர்ணயிக்க தேவையான கொள்கை முடிவை அரசு எடுக்க வேண்டும் என்றும் அதன் மூலம் இந்த ஈரநிலங்களை சீரழிவில் இருந்து மீட்டு அதன் முக்கியத்துவத்தை உணர்ந்து பயனை அடைய வழிவகுக்கும் என்று அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.