டில்லி:

டில்லியில் இருந்து இந்தூருக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் நேற்று முன் தினம் சென்று கொண்டிருந்தது. இதில் 120 பேர் பயணம் செய்தனர். இதில் டில்லியை சேர்ந்த அர்பிதா தால், இவரது கணவர் அதுல் ஆகியோரும் பயணம் செய்தனர்.

நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது இவர்களது இருக்கைக்கு அடியில் வைத்திருந்த கை பையில் இருந்து புகை வந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அர்பிதா உதவிக்கு விமான சிப்பந்தியை அழைத்தார்.

சிப்பந்த ஓடி வந்து பார்த்தபோது கை பை எரிந்து கொண்டிருந்தது. பையை எடுத்து பார்த்தபோது உள்ளே இருந்த 3 செல்போன்களில் ஒன்று எரிந்து கொண்டிருந்தது. அது சாம்சங் ஜே7 என்பது தெரியவந்தது. இதையடுத்து துரிதமாக செயல்பட்ட அந்த சிப்பந்தி விமானத்தில் இருந்து தீயனைப்பான் கருவி மூலம் தீயை அனைக்க முயற்சித்தார்.

ஆனால், எதிர்பாராதவிதமாக அது வேலை செய்யவில்லை. இதையடுத்து ஒரு டிரே தண்ணீரில் 3 செல்போன்களையும் போட்டு தீயை அனைத்தார். இதனால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. 120 பயணிகளும் பத்திரமாக இந்தூரில் தரையிறங்கினர்.

சம்பவம் நடந்ததை ஜெட் ஏர்வேஸ் விமான நிறுவன செய்தி தொடர்பாளர் உறுதி செய்துள்ளார். உரிய விசாரணைக்கு பிறகு செல்போன் ஒப்படைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். விமானத்தில் இருந்த தீயனைப்பான் வேலை செய்யாதது குறித்து புகார் செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து சாம்சங் செய்தி தொடர்பாளர் கூறுகையில், ‘‘இது தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பேசி வருகிறோம். வாடிக்கையாளரின் பாதுகாப்பு தான் முன்னுரிமை அளிக்கப்படுகிறது’’ என்றார்.