டெல்லி: ‘டோலோ 650’ மாத்திரை பரிந்துரைக்க டாக்டர்களுக்கு ரூ.1000 கோடி அளவுக்கு இலவசங்களை மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரே லேப்ஸ்’  வாரியிறைத்து உள்ளது என உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கொரோனா காலக்கட்டமான கடந்த இரு ஆண்டுகளில் மைக்ரோ லேப்ஸ் நிறுவனத்தின் ‘டோலோ 650’ மாத்திரைகள் ஒவ்வொருவரின் வீடுகளிலும் அன்றாடம் சாப்பிடும் உணவுப்பொருள் போன்ற அளவுக்கு மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு, அமோகமாக விற்பனையாகி, பல ஆயிரம் கோடி ரூபாய் கல்லா கட்டியது. இதையடுத்துகடந்த ஜூலை மாதம்  ‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’  மற்றும் அந்நிறுவனத்துக்கு சொந்தமான  40 இடங்களில் வருமான வரித்துறை  அதிரடி சோதனை நடத்தி, பல்வேறு ஆவணங்களையும், நிதிமுறைகேடுகளையும் கண்டுபிடித்தது.

இதுதொடர்பாக இந்திய மருத்துவ மற்றும் விற்பனை பிரதிநிதிகள் கூட்டமைப்பு சார்பில்,  உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு நீதிபதிகள் டி.ஒய்.சந்திரசூட், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வில் விசாரணைக்கு வந்தது.

மனுவில்,    ‘தங்கள் நிறுவனம் தயாரிக்கும் மருந்துகளை அதிக அளவில் நோயாளிகளுக்கு பரிந்துரைக்கும் டாக்டர்களுக்கு ஊக்கத்தொகை என்ற பெயரில், விலை உயர்ந்து பரிசு பொருட்கள், வெளிநாட்டு பயணங்களுக்காக கோடிக்கணக்கில் பணம் செலவழிக்கும் நடைமுறைக்கு, மருந்து தயாரிப்பு நிறுவனங்களை பொறுப்பாக்க வேண்டும்’ என, கோரப்பட்டு இருந்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் வாதிடுகையில், ”காய்ச்சலுக்கு அளிக்கப்படும், ‘டோலோ 650’ மாத்திரைகளை நோயாளிகளுக்கு அதிக அளவில் பரிந்துரைப்ப தற்காக, அந்நிறுவனம் 1,000 கோடி ரூபாய் பணத்தை டாக்டர்களுக்கான ஊக்கத்தொகைக்காக செலவிட்டுள்ளது,” என்றார். இதை கேட்ட நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

”கொரோனா தொற்றால் நான் பாதிக்கப்பட்ட போது கூட எனக்கு அந்த மாத்திரைகள் தான் பரிந்துரைக்கப்பட்டன. இது மிக தீவிரமான பிரச்னை. இது உடனடியாக கவனிக்கப்பட வேண்டும்,” என, நீதிபதி சந்திரசூட் தெரிவித்தார். இது தொடர்பாக, 10 நாட்களுக்குள் பதில் அளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

‘டோலோ-650’ மாத்திரை தயாரிப்பு நிறுவனமான ‘மைக்ரோ லேப்ஸ்’ உள்பட 40 இடங்களில் வருமான வரித்துறை சோதனை…