சென்னை: மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6000 நிவாரணம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான டோக்கன்  வழங்கும் பணி வரும் 16ந்தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை உள்பட அண்டை மாநிலங்களை புரட்டிப்போட்ட, மிக்ஜாம் புயலால் தமிழ்நாட்டில் 1 கோடியே 20 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர்களுக்கு தலா ரூ.6ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

டிசம்பர் 4ந்தேதி ஆந்திரா அருகே கரையை கடந்த  மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் கனமழை பெய்தது. அப்போது திருவள்ளூர், காஞ்சிபுரம், சென்னை மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் பலத்த தரைக்காற்று மணிக்கு 60 முதல் 70 கிலோமீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோமீட்டர் வேகத்திலும் வீசியது. சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சாலைகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.

சென்னையில் பல்வேறு இடங்களில் மரங்கள் முறிந்து சாலைகளில் விழுந்தன. நீர் நிரம்பியதால், முக்கிய சுரங்கப் பாதைகள் அனைத்தும் மூடப்பட்டன. வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில், சில இடங்களில் படகுகள் மூலம் மக்கள் மீட்கப்பட்டனர். இதையடுத்து பாதுகாப்பு காரணங்களை கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய நான்கு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரி, அரசு அலுவலகம், வங்கி உள்ளிட்ட நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து மீட்பு பணிகளை மேற்கொண்ட தமிழ்நாடு அரசு, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ரூ.6 ஆயிரம் நிவாரணம் வழங்குவதாக அறிவித்து உள்ளது. இந்த நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய திமுக எம்.பி. டி.ஆர்.பாலு, சென்னை, செங்கல்பட்டு உள்ளிட்ட 5 மாவட்டங்களில் ஒருகோடியே 20 லட்சம் பேர் புயல் மழையால் பாதிக்கப்பட்டுள்ளதாக டி.ஆர்.பாலு தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில்,  மிக்ஜாம் புயல் வெள்ளத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன்கள் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்து இருக்கிறார்.

இதுகுறித்து பேசிய அவர், “புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வெள்ள நிவாரணமாக ரூ. 6 ஆயிரம் வழங்குவதற்கான டோக்கன் டிசம்பர் 16-ம் தேதியில் இருந்து வழங்கப்படும். பத்து நாட்களுக்குள் நிவாரண தொகை வழங்கப்பட்டு விடும்,” என்று தெரிவித்தார்.