டெல்லி: மாநிலங்களுக்கு இடையே இ பாஸ் தேவை இல்லை என்று அறிவித்துள்ள மத்திய அரசு, சில வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டு உள்ளது.

 
நாடு முழுவதும் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளில் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கை மத்திய அரசு நீட்டித்துள்ளது. இதுதொடர்பாக செப்டம்பர் 30ம் தேதி உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள கட்டுப்பாடுகள் நவம்பர் 30ம் தேதி வரை அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது: மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகளில் அனைத்து நடவடிக்கைகளும் கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே தளர்த்தப்பட்டு வருகின்றன.
மெட்ரோ ரயில், வணிக வளாகங்கள், ஓட்டல்கள், உணவகங்கள், மதபிரச்சார இடங்கள், உடற்பயிற்சிக் கூடங்கள், திரையரங்குகள், பொழுது போக்கு பூங்கா ஆகியவற்றில் சுகாதார மற்றும் பாதுகாப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. சில பகுதிகளில் மட்டும் நோய் தொற்றுகள் அதிகளவில் இருப்பதால் பள்ளிகள், பயிற்சி நிறுவனங்கள், தனியார் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றை மீண்டும் திறப்பதற்கான முடிவுகளை அந்தந்த மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்கள் முடிவு செய்து கொள்ளலாம்.
இவை தவிர, மேலும் சில வழிகாட்டுதல்களையும் மத்திய அரசு அனுமதித்து உள்ளது. அதன்படி, சர்வதேச விமான பயணம், விளையாட்டு வீரர்களின் பயிற்சிக்கான நீச்சல் குளங்கள், வணிக நோக்கத்துக்காக பயன்படுத்தப்படும் கண்காட்சி அரங்குகள், திரையரங்குகள், மல்டிபிளெக்ஸ் அரங்குளில் 50 சதவீதத்துடன் அனுமதிக்கலாம்.
மேலும், சமூகம், கல்வி,விளையாட்டு, பொழுதுபோக்கு, மத ரீதியான கூட்டங்கள், அரசியல் கூட்டங்கள் ஆகியவற்றை 50 சதவீதம் பேருடன் அல்லது 200 நபர்களுக்கு மிகாமலும் நடத்திக் கொள்ளலாம்.  மாநில அரசுகளோ அல்லது மாவட்ட நிர்வாகமோ கட்டுப்பாட்டு மண்டலங்களுக்கு வெளியே மத்திய அரசின் அனுமதி இல்லாமல் உள்ளூர் ஊரடங்கை அறிவிக்கக்கூடாது. மாநிலங்களுக்காகவோ அல்லது மாநிலங்களுக்கு வெளியவோ பயணிக்கவோ, சரக்கு போக்குவரத்துக்கோ எந்த கட்டுப்பாடுகளும் இல்லை.
65 வயதுக்கு மேற்பட்டவர்கள், நோயுற்றவர்கள், கர்ப்பிணிகள், 10 வயதுக்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் அத்தியாவசிய தேவைகள் தவிர மற்ற தருணங்களில் வெளியே வரக்கூடாது. ஆரோக்ய சேது  செயலி தொடர்ந்து பயன்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.