காவிரி பிரச்சினையை எம்.ஜி.ஆர்.  எதிர்கொண்டது எப்படி

Must read

ராமண்ணா வியூவ்ஸ்:
எம்.ஜி.ஆர். பற்றி பொதுவாக ஒரு விமர்சனம் உண்டு. அவர் நல்லவர். மனிதாபிமானம் மிக்கவர். அன்பானவர்.ஆனால்,  அரசு நிர்வாகத்தில் அவர் அத்தனை சிறப்பாக செயல்படவில்லை – என்பதுதான் அது.
இந்த கருத்து தவறு. முதல்வராக இருந்தபோது  எத்தனையோ சிக்கலான பிரச்சினைகளுக்கு தனக்கே உரிய மதிநுட்பத்தோடு காதும் காதும் வைத்தது போல சிறப்பான தீர்வு கண்டவர் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர். முதல்வராக இருந்தபோதும் காவிரி பிரச்சினை இருக்கத்தானே செய்தது.
அப்போது காவிரியில் தண்ணீர் இல்லாமல் குறுவை சாகுபடி செய்ய முடியாமல் போகும் அபாயம் ஏற்பட்டது.
தமிழக விவசாயிகள் தவித்து நின்றனர். கர்நாடகம் வழக்கம் போல் முறுக்கிக்கொண்டு நின்றது.
என்ன செய்யலாம் என்று முதல்வர் எம்.ஜி.ஆர். யோசித்தார்.  அப்போது, கர்நாடக முதல்வராக இருந்த ராமகிருஷ்ண ஹெக்டே உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருந்தார். அவருடன். உடனடியாக பேச முடியாத நிலை.
அப்போது கர்நாடகாவில் கல்வி அமைச் சராக இருந்தவர் ரகுபதி. எம்.ஜி.ஆரின்  நெருங்கிய நண்பர். ரகுபதியின் தாயார் எம்.ஜி.ஆர். மீது மிகுந்த பாசம் கொண்டவர்.
ஒரு நாள் காலை…
முதல்வர் எம்.ஜி.ஆர். தன்னுடன் இரண்டு அதிகாரிகளை மட்டும் அழைத்துக்கொண்டு சென்னையில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவுக்கு  கிளம்பினார். கர்நாடகா அமைச்சர் ரகுபதியை தொடர்பு கொண்டு விமான நிலையத்துக்கு வரச் சொன்னார்.
எம்.ஜி.ஆரின் திடீரென வந்திருக்கிறாரே.. என்ற யோசனையும் பரபரப்புமாக  பெங்களூரு விமான நிலையத்துக்கு வந்து எம்.ஜி.ஆரை வரவேற்றார் ரகுபதி. தன்னுடன் வந்த தமிழக அதிகாரிகளை அரசு காரில் அனுப்பிவிட்டு, எம்.ஜி.ஆர். மட்டும் ரகுபதியின் காரில் ஏறிக் கொண்டார். நேராக ரகுபதியின் வீட்டுக்கே காரை விடச் சொன்னார்.

எம்.ஜி.ஆர். = ஹெக்டே
எம்.ஜி.ஆர். = ஹெக்டே

ரகுபதியுடன் சாதாரணமாக பேசிக் கொண்டு வந்த எம்.ஜி.ஆர்., தான் வந்த விவரம் பற்றி எதுவும் பேசவில்லை.
காலை நேரம். தங்கள் வீட்டுக்கு வந்த எம்.ஜி.ஆரைக் கண்ட ரகுபதியின் தாய், ஆனந்த அதிர்ச்சி அடைந்தார். எம்.ஜி.ஆரை அன்போடு வரவேற்று  சிற்றுண்டி பரிமாறினார்.
எம்.ஜி.ஆர். சாப்பிட்டார். சாப்பிட்டு முடித்தார்.
ஆனால் தன் அருகே வைத்திருந்த தண்ணீர் குவளையை மட்டும் எடுக்கவே இல்லை. ஆமாம்.. தண்ணீர் குடிக்கவே இல்லை.
‘ஏன் தண்ணீரை குடிக்கவே இல்லை?’ என்று ரகுபதியின் தாய் கேட்டார்.
எம்.ஜி.ஆர்.,  ரகுபதியை பார்த்து சிரித்துக் கொண்டே, ‘‘தண்ணீர் வேண்டும்தான். ஆனால், உங்கள் மகன் கொடுக்க மாட்டேன் என்கிறாரே? அப்புறம்  எப்படி தண்ணீர் குடிப்பது?’’ என்று கேட்டார்.
ரகுபதிக்கு அப்போதுதான் புரிந்தது.   எம்.ஜி.ஆர். தனியாக வந்த நோக்கத்தை புரிந்து கொண்டார். தன் கையாலேயே எம்.ஜி.ஆருக்கு தண்ணீர் கொடுத்து உபசரித்தார். அதோடு செயலிலும் இறங்கினார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாதான் அப்போது, கர்நாடகாவின் பொதுப்பணித்துறை அமைச்சராக இருந்தார். அவருக்கு தொலைபேசியில் பேசி, உடனடியாக வரச் சொன்னார். அங்கிருந்து மூவரும் மருத்துவமனையில் இருந்த, கர்நாடக முதல்வர் ராமகிருஷ்ண ஹெக்டேவை பார்க்கச் சென்றார்கள்.
அங்கே, பிரச்சினையை எப்படி சமாளிப்பது என்பது குறித்து விவாதித்தனர்.  கர்நாடகாவில் தண்ணீர் இருப்பு எவ்வளவு, இருக்கும் நீரை இரு மாநிலங்களும் பாதிக்காத வகையில் பகிர்ந்து கொள்வது எப்படி என்பன குறித்து விவாதித்தனர்.
எந்தவித அறிவிப்பும் இல்லாமல்.. அதாவது விளம்பரம் இல்லாமல் தமிழகத்துக்கு விளம்பரம் இல்லாமல் தண்ணீர் விட முடிவு செய்யப்பட்டது.
ramana
உடல் நலம் சரியில்லாமல் இருக்கும் ராம கிருஷ்ண ஹெக்டேவை எம்.ஜி.ஆர். சந்தித்து நலம் விசாரித்தார் என்று செய்திகள் வெளியாகின.
இதே போல பல. கர்நாடக முதல்வராக இருந்த குண்டுராவ், எம்.ஜி.ஆரின் ரசிகர். இதை வெளிப்படையாகவே அறிவித்திருக்கிறார்.
குண்டுராவிடமும் ஒருமுறை எம்.ஜி.ஆரே பேசி விளம்பரப்படுத்திக்கொள்ளாமல்  காவிரியில் தண்ணீர் விடச் செய்தார்.
எம்.ஜி.ஆர். ஒரு தேர்ந்த நிர்வாகியாவே திழ்ந்தார் என்பதற்கு உதாரணம் இவை. அதோடு, விளம்ப நோக்கமின்றி செயல்பட்டார் என்பதற்கும் இவை எடுத்துக்காட்டுக்கள்.

More articles

Latest article