சென்னை: எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமான விவகாரம் தொடர்பான வழக்கில், தமிழ்நாடு அரசு அதிகாரிகளை கடுமையாக சாடிய சென்னை உயர்நீதிமன்றம், சிஎம்டிஏ சென்னை மாநகராட்சிக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு உள்ளது.
சென்னையில் திட்ட அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகள் அளிக்கப்பட்ட விவகாரத்தில் சென்னை மாநகராட்சி, சிஎம்டிஏ, மாசு கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னையில் கட்டப்பட்டு வரும் பல கட்டிடங்கள் முறையான திட்ட அனுமதி பெறாமலும், திட்ட அனுமதி பெற்றிருந்தாலும், அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்துவிட்டு, திட்டத்தை மாற்றியும் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால், பல சாலைகள், போக்குவரத்துக்கு லாயக்கற்று குறுகிய சாலைகளாக மாறி வருகின்றன. இது பொதுமக்களிடையே கடுமையான அதிருப்தியை ஏற்படுத்தி வருகின்றன.
இந்த நிலையில், சென்னையின் பிரபலமான எம்ஜிஎம் மருத்துவமனை புதிதாக அழ்வார்பேட்டை பகுதியில் கட்டி வரும் கட்டுமானத்தில் விதிகள் மீறப்பட்டு இருப்பதாக, மூத்த வழக்கறிஞர் ஜி.ராஜகோபாலன், சென்னை உயர் நீதிமன்றத்தில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார். அவரது மனுவில், “தனியார் மருத்துவமனை ஒன்று ஆழ்வார்பேட்டையில் உள்ள செயின்ட் மேரீஸ் சாலையில் புதிதாக 10 மாடி மருத்துவமனை கட்டும் பணிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தக் கட்டுமானப் பணிகள் காரணமாக கடுமையான ஒலி மாசு ஏற்படுகிறது. மேலும், கட்டடப் கட்டுமானப் பணிகள் நள்ளிரவையும் தாண்டி அதிகாலை வரை நடைபெறுகின்றன.
இந்தப் பகுதியில் மூத்தக் குடிமக்கள் அதிகம் வசிக்கின்றனர். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்துக்கு கடிதம் அனுப்பினேன். எந்தப் பதிலும் இல்லை. மாசு கட்டுப்பாட்டு வாரியம், சிஎம்டிஏ, காவல் துறையினருக்கு புகார் அளித்தும் எந்தப் பதிலோ அல்லது நடவடிக்கையோ இல்லை. ஆகவே இந்தப் பணிகளுக்கு நேரம் நிர்ணயிக்க வேண்டும். மேலும் ஒலி மாசுபாட்டையும் கட்டுப்படுத்த வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது சிஎம்டிஏ தரப்பில் உரிய அனுமதி வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. மேலும் அருகில் உள்ள பள்ளிக் கூடத்தில் விரிசல் ஏற்பட்டதும் தெரியவந்தது. அதைத்தொடர்ந்து எம்ஜிஎம் மருத்துவமனை கட்டுமானத்துக்கு நீதிபதிகள் தடை விதித்தனர்.
இதையடுத்து வழக்கு மீண்டும் 27ந்தேதி விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிஎம்டிஏ, மாநகராட்சி அதிகாரிகளை கடுமையாக சாடியதுடன், பெருநகர சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் ஆகியவற்றுக்கு தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தனர். தொடர்ந்து, தமிழ்நாடு மாசுக் கட்டுபாட்டு வாரியத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்தனர். இதையடுத்து, சம்பந்தப்பட்ட தனியார் மருத்துவமனை நிர்வாகத்துக்கு ரூ.25 லட்சம் அபராதம் விதித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தனர்.