மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளது. இதன் காரணமாக அணையின் நீர்மட்டம் 115 அடியை தாண்டியது.. குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 1,500 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால், கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
தமிழக- கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 46 ஆயிரத்து 353 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 114 புள்ளி 46 அடியில் இருந்து, 116 புள்ளி 10 அடியாக உயர்ந்துள்ளது. இதனால் நேற்று 112 அடியாக இருந்த அணையின் நீர் மட்டம் இன்று 115 அடியை தாண்டியுள்ளது. ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 1.64 அடி அளவிற்கு உயர்ந்துள்ளது. அணையின் நீர் இருப்பு 86 புள்ளி 24 டி. எம்.சி.யாக உள்ளது. குடிநீர் தேவைக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரத்து 500 கன அடி நீர் திறந்துவிடப்படுகிறது.
இதே நிலை நீடித்தால், இன்னும் ஒருசில தினங்களில் மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120 அடியை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேட்டூர் அணை வழக்கமாக ஜூன் 12ம் தேதி திறக்கப்படும். இந்நிலையில், இந்தாண்டு முன்கூட்டியே அணை திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனார் கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், ஒகேனக்கலில் நீர்வரத்து வினாடிக்கு 55 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ள நிலையில், அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.