சென்னை: கடந்த அதிமுக அம்மா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் திமுக ஆட்சியில் ஆறாய் ஓடுகிறது  என எதிர்க்கட்சி தலை வரும், முன்னாள் முதல்வருமான ஈபிஎஸ் குற்றம் சாட்டியிருந்ததுடன், காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என ஈபிஎஸ் வலியுறுத்திருந்தார். இந்த நிலையில், தமிழ்நாட்டில் கள்ளச்சாராய விற்பனை கட்டுப்படுத்தப் பட்டுள்ளது டிஜிபி சைலேந்திர பாபு பதில் தெரிவித்து உள்ளார்.

அதுபோல, காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது. உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள், சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்றும் விளக்கம் அளித்தார்.

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாக கொலை, கொள்ளை, பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு போதை பழக்கமும், குடிப்பழக்கமுமே காரணம் என்று குற்றம் சாட்டப்படுகிறது. இந்த நிலையில்,  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என திமுக அரசை வலியுறுத்தி அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதில், விடியா தி.மு.க. அரசு அமைந்த பின்பு, சமூக விரோதச் செயல்கள் அதிகரித்துள்ளதை அவ்வப்போது அறிக்கைகள் மூலமும், சட்டப் பேரவை விவாதங்களிலும் சுட்டிக் காட்டியுள்ளேன். கடந்த ஓராண்டில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விற்பனை,ஆளும் திமுகவைச் சேர்ந்தவர்களின் துணையோடு நடப்பதாக, பல்வேறு ஊடகங்களில் செய்திகள் வந்துள்ளன. அம்மா அரசால் முற்றிலும் ஒழிக்கப்பட்ட கள்ளச்சாராயம் தற்போதைய இந்த அரசில் ஆறாய் ஓடுகிறது.மெரினா கடற்கரை மணலில் புதைக்கப்பட்டிருக்கும் கள்ளச்சாராய ஊரல்கள்,போலி மது பாட்டில்களைத் தோண்டி எடுக்கும் செய்தியினை பார்க்கும்போது மனம் பதைபதைக்கிறது. எனவே, அம்மா அரசின் ஆட்சியில் காவல் துறை எப்படி சுதந்திரமாக செயல்பட்டதோ,அதுபோல் இந்த விடியா அரசும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருட்களில் இருந்து மக்களைக் காக்க,காவல் துறையினரின் கைகளை கட்டிப் போடாமல் சுதந்திரமாகச் செயல்பட அனுமதிக்க வேண்டும் என்று இந்த அரசை வலியுறுத்துகிறேன்’ என தெரிவிதிருந்தார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சி தலைவரின் குற்றச்சாட்டுக்கு டிஜிபி சைலேந்திரபாபு பதில் தெரிவித்து உள்ளார்.  திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தபோது,  தமிழ்நாட்டில்  ஒரு சில இடங்களில் மட்டுமே கள்ளச்சாராயம் விற்பனை நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் விரைவில் கள்ளச் சாராயம் இல்லாத நிலை உருவாக்கப்படும். மாணவர்கள் இடையேயான மோதல்கள் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன. குற்றச்செயல் களில் ஈடுபடும் மாணவர்களின் பெற்றோக்களை அழைத்து பேசுகிறோம்; மீறினால் வழக்கு பதியப்படுகிறது.

காவல்நிலைய மரணங்களை தடுப்பது தொடர்பாக திருச்சியில் போலீசாருக்கு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்தப்படும். காவல்நிலைய மரணத்தை தடுப்பது பற்றி மத்திய மண்டல போலீசாருக்கு டிஜிபி உள்ளிட்டோர் அறிவுரை தந்தனர். காவல் நிலையத்தில் காவலர்கள் தாக்கியதால் மட்டுமே குற்றவாளிகள் இறந்தார்கள் என்று சொல்லமுடியாது. உடல்நிலை சரியில்லாமல் கூட சிலர் இறந்து விடுகிறார்கள், சிலர் தற்கொலை செய்து கொள்கிறார்கள். காவல்நிலைய மரணங்கள் கூடாது, போலீஸ் வன்முறையை கையாளக்கூடாது என முதல்வர் அறிவுறுத்தியுள்ளார். தேவைபப்டும் போது பலத்தை போலீஸ் பயன்படுத்தலாம்.

குற்றவாளிகளை காவலர்கள் கண்ணியமாகவும் பாதுகாப்பாகவும் நடத்த வேண்டும் என்பதற்கு கருத்தரங்கம் நடத்தப்படுகிறது. லாக் அப் மரணமே இல்லை என்பதே இந்த பயிற்சியின் நோக்கம். தேசிய மனநல பயிற்சி மையத்திலிருந்து 300 காவலர்கள் பட்டய சான்றிதழ் பெற்றுள்ளனர். அவர்களை கொண்டு காவல் நிலையில் பயிற்சிகள் வழங்கப்படும்.

குற்றவாளிகள் போலீசை பார்த்து பயப்பட வேண்டும். மக்கள் தாக்கினால் தற்காத்துக் கொள்ள போலீசாருக்கு கராத்தே வர்ம கலைகள் கற்று தரப்பட்டுள்ளன. தேசிய மனநல பயிற்சி மையத்திலிருந்து 300 காவலர்கள் பட்டய சான்றிதழ் பெற்றுள்ளனர். அவர்களை கொண்டு காவல் நிலையில் பயிற்சிகள் வழங்கப்படும். காவல்துறையில் புதிதாக 10 ஆயிரம் போலீசார் பணியில் சேர உள்ளனர்.

இவ்வாறு கூறினார்.