சேலம்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் 2.70அடி உயர்ந்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 95.10 அடியிலிருந்து 97.80அடியாக உயர்ந்ததுள்ளது. இதனால் அணை விரைவில் 100அடி எட்டும் என்று நம்பப்படுகிறது.
கர்நாடகாவில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகளில் இருந்து தொடர்ந்து உபரி நீர் காவிரியில் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால்மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்து வருகிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 13,477 கன அடியிலிருந்து 39, 634 கன அடியாக அதிகரித்து உள்ளது.
அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 100கன அடி வீதம் திறக்கப்பட்டு வருகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 550கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது. இந்த தண்ணீர் சேலம், நாமக்கல், ஈரோடு, திருச்சி, கரூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கடலூர் உள்ளிட்ட டெல்டா பாசனத்துக்கு பயன்படுகிறது..
பாசனத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவைவிட அணைக்கு வரும் நீரின் அளவு அதிகமாக இருப்பதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நீர்மட்டம் கிடு கிடுவென உயர்ந்து வருகிறது.
தற்போது அணையின் நீர் இருப்பு 62.02டி எம் சி யாக இருந்தது. நேற்று 95.10 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று 97.800 அடியாக உயர்ந்தது. மழை அதிகரித்து நீர்வரத்து கூடுதலாகும் பட்சத்தில் நீர்மட்டம் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாளொன்றுக்கு சராசரியாக 2 அடி வீதம் நீர்மட்டம் உயர்ந்து வரும் நிலையில், நாளைக்குள் 100 அடியை எட்டும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இதனால், விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.