நடப்பாண்டில் 3வது முறையாக முழுக் கொள்ளளவை எட்டிய மேட்டூர் அணை

Must read

நடப்பாண்டில் மூன்றாவது முறையாக கடும் மழை காரணமாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை மீண்டும் எட்டியுள்ளது.

காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கன மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வந்தது. நேற்று மாலை வரை, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 18,000 கன அடியாக இருந்த காரணத்தால், அணையில் இருந்து வினாடிக்கு 500 கன அடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவான 120 அடியை விரைவில் எட்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்தும், கபனி அணையிலிருதும் தமிழகத்திற்கு விநாடிக்கு 20,501 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இன்று காலை 6.40 மணிக்கு மேட்டூர் அணை தனது முழு கொள்ளளை நடப்பாண்டில் மூன்றாவது முறையாக எட்டியுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து உபரி நீர் திறக்கப்பட உள்ள காரணத்தால், சேலம், தஞ்சாவூர், ஈரோடு, கடலூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களை சேர்ந்த காவிரி கரையோர மக்களுக்கு நேற்று இரவு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அத்தோடு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படி மாவட்ட ஆட்சியர்களுக்கும், பொதுப்பணித்துறை அறிவுறுத்தியிருந்தது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாற்ற, மாவட்ட நிர்வாகம் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேட்டூர் ஆணை வரலாற்றில், கடந்த 86 ஆண்டுகளில் 44வது முறையாக மேட்டூர் அணை தனது முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More articles

Latest article