வறுமை காரணமாக சாதிக்க முடியவில்லை என்கிற மனவேதனையில், இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னையை சேர்ந்த முரளிதரன் என்பவர், 12ம் வகுப்பு படித்துவிட்டு பெரம்பலூரில் தனியார் டயர் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்துள்ளார். நேற்று இரவு தான் தங்கியிருந்த அறையில் முரளிதரன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார். இதை பார்த்த சக ஊழியர்கள், அதிர்ச்சியடைந்தனர். இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் கொடுக்கப்பட்ட பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்த காவலர்கள், முரளிதரன் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக சென்னையில் வசிக்கும் அவரின் பெற்றோருக்கு காவல்துறையினர் தகவல் கொடுத்தனர்.

முரளிதரன் தங்கியிருந்த அறையை காவலர்கள் சோதனையிட்டபோது, தற்கொலை செய்துகொள்வதற்கு முன் அவர் எழுதி வைத்திருந்த டைரி ஒன்று சிக்கியது. அதில் “எதிர்காலத்தில் நிறைய சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அதற்கான கல்வியோ, வேலையோ என்னிடம் இல்லை. தற்போது கிடைக்கும் ஊதியத்தால் வறுமையும் தீரப் போவதில்லை. எனவே, நான் தற்கொலை செய்துகொள்வதை என்னுடைய குடும்பத்தார் மன்னிக்க வேண்டும்” என்று உருக்கமாக முரளிதரன் எழுதியிருந்தார்.

டைரியில் இப்படி குறிப்பிட்டிருந்தாலும், முரளிதரனின் தற்கொலைக்கு ஆலையில் மன உளைச்சல் தரும் வகையில் யாராவது நடந்து கொண்டார்களா அல்லது வறுமை காரணமாக தற்கொலை செய்தாரா என காவல்துறையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.