சேலம்,
சேலம் மேட்டூர் அருகே 500 ரூபாய் நோட்டு கட்டுகள் அமிலம் ஊற்றி எரிக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் செல்லும் காவிரி ஆற்றின் கரையோரம் பணத்தை அமிலம் ஊற்றி மர்ம நபர்கள் எரித்துள்ளனர்.
பிரதமர் மோடியின் ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பை தொடர்ந்து ஏழை, நடுத்தர வர்க்க மக்கள் திண்டாடி வருகின்றனர்.
ஆனால், வருமானத்துக்கு அதிகமாக பணம் சேர்த்து வைத்துள்ள கருப்பு பண முதலைகள் பணத்தை வங்கியில் கட்டினால் வரியுடன் அபராதம் செலுத்த நேரிடும் என கருதி பணத்தை எரித்தும், குப்பையில் வீசியும் வருகின்றனர்.
money-acid
தமிழ்நாட்டிலும் ஏற்கனவே ஈரோடு அருகே சுடுகாட்டில் மூட்டை மூட்டையாக செல்லாத நோட்டுகள் கைப்பற்றப்பட்டன. தற்போது சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த காவிரி கிராஸ் ஆற்றங்கரை பகுதியில் கட்டு கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் அமிலம் ஊற்றி அழிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ளது காவிரி கிராஸ். இங்கு காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட பாலத்தின் அருகில் கட்டுக்கட்டாக 500 ரூபாய் நோட்டுகள் கிடந்தன. இந்த ரூபாய் நோட்டுகள் மீது அமிலம் ஊற்றி, அதில் இருந்த எழுத்துகள் அனைத்தும் அழிக்கப்பட்டிருந்தது.
ரூபாய் நோட்டுகள் மீது அமிலம் ஊற்றப்பட்டிருப்பதால், ரூபாய் நோட்டுகள்  அனைத்து கருப்பு நிறமாக காணப்பட்டது.
பணம் எரிக்கப்பட்ட பகுதி செடி, கொடிகள் நிறைந்து புதர்களாக உள்ளது. அந்த இடத்தில் நேற்று இரவு யாரோ மர்ம ஆசாமிகள் சாக்கு மூட்டையில் பணத்தை கொண்டு வந்து இங்கு போட்டு அமிலத்தை ஊற்றி எரித்து இருக்கிறார்.
இன்று காலை வழக்கம்போல் அந்த பகுதியில் சென்ற பொதுமக்கள் யாரோ ஒருவர் சொன்ன தகவலை தொடர்ந்து அந்த பகுதி கிராம மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து பணத்தை பார்த்து விட்டு செல்கின்றனர்.
இதுபற்றி போலீசார் கூறுகையில், இந்த ரூபாய் நோட்டுகள் கருப்பு பணமாக இருக்கக்கூடும் என்றும். மேற்கொண்டு  விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றும் கூறினர்.