சென்னை: விமான நிலையம் முதல் வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பேரவையில் உறுப்பினரின் கேள்விக்கு முதல்வர் ஸ்டாலின் பதில் அளித்தார்.
தமிழக சட்டப்பேரவையின் புத்தாண்டின் முதல் கூட்டத்தொடர் நேற்று (ஜனவரி 5ந்தேதி) ஆளுநர் ஆர்.என்.ரவியின் உரையுடன் தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் இன்றும், நாளையும் ஆகிய இரு நாட்கள் மட்டுமே நடைபெற உள்ளது. இன்று காலை சட்டப்பேரவை கூட்டம் கூடியவுடன், கடந்த காலங்களில் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், முப்படைத் தளபதி விபின் ராவத் உள்ளிட்ட 14 பேர், கன்னட நடிகர் புனித் ராஜ்குமார் உள்ளிட்டோருக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து கேள்வி நேரம் தொடங்கியது. இது நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.
அப்போது, பல்லாவரம் சட்டப்பேரவை உறுப்பினர் இ.கருணாநிதி சென்னை விமான நிலையத்திலிருந்து வண்டலூர் வரை மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்படுமா என்ற முதல் கேள்வியை கேட்டார். அதற்கு பதிலளித்த முதல்வர் ஸ்டாலின்,வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்படுவதால், மீனம்பாக்கத்தில் இருந்து கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் சேவையை நீடிக்க வேண்டிய அவசியம் உள்ளது. இதனை கருத்தில் கொண்டு இந்த திட்டத்திற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணி முடிக்கப்பட்டுள்ளது. இந்த விரிவான திட்ட அறிக்கை அரசின் ஆய்வில் உள்ளது. இந்த அறிக்கையின் அடிப்படையில் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை அரசு தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
சட்டமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, பட்டுக்கோட்டை தொகுதி, அதிராம்பட்டினம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டத்தினை சிறப்பு கவனம் செலுத்தி செயல்படுத்த அரசு ஆவண செய்யுமா என கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, அதிராம்பட்டு நகராட்சியில் தற்போது 34,122 மக்கள் தொகை உள்ளதாகவும், 49.92 கி.மீ தூரத்திற்கு சாலைகள், 7.83 கி.மீ தொலைவிற்கு வடிகால்கள் பராமரிக்கப்பட்டு வருவதோடு, 7226 குடியிருப்புகள் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
புதிதாக உருவாக்கப்பட்ட நகராட்சிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்த சிறப்பு கவனம் செலுத்தி பணிகளை முடிக்க முதலமைச்சர் உத்தரவிட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் பணிகள் முடிக்கப்படும் எனவும் கூறினார்.