சென்னை: சென்ட்ரல் – கோயம்பேடு- விமான நிலையம் மார்க்கத்தில் தொழில் நுட்ப கோளாறு காரணமாக மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அதை நம்பிச் சென்ற பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பின்னர் 11மணிக்கு மேல் தொழில்நுட்ப கோளாறு சரி செய்யப்பட்டு வழக்கம்போல் இயங்குவதாக அறிவிக்கப்பட்டது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக, சென்ட்ரலில் இருந்து விமான நிலையம் வரை கோயம்பேடு வழி செல்லும் மெட்ரோ ரயில் தற்காலிகமாக நிறுத்ததப்பட்டுள்ளது. இந்த வழியில் ரயில்கள் நிறுத்தப்பட்டுள்ளதோடு இயக்குவதிலும் நேர மாற்றம் செய்யப்பட்டுள்ளது. லிம்கோ நகர் – விமான நிலையம் வரையிலான மெட்ரோ ரயில் 6 நிமிட இடைவெளியில் இயக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதுபோல, சென்ட்ரல் முதல் பரங்கிமலை நிலையம் வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு காரணமாக, இன்று காலை பணிக்கு சென்ற பலர் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
இந்த நிலையில் காலை 11மணி அளவில் மெட்ரோ நிர்வாகம் வெளியிட்ட அறிவிப்பில், சென்னையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக பாதிக்கப்பட்ட மெட்ரோ ரயிலின் சேவை சீரடைந்து மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ளது.