திருஷ்டியைக் கழிக்கச் சின்ன சின்ன வழிமுறைகள்

வாழ்வில், ஏதேனும் ஒருநல்லது நடந்தாலும் கெட்டது நடந்தாலும் நம் வீட்டில் சொல்லும் விஷயம்… ‘திருஷ்டி சுத்திப் போடுங்க...’ என்பதுதான்!

துர்சிந்தனைகளின், கெட்ட எண்ணங்களின் தாக்குதல்தான் கண் திருஷ்டி என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதைக் கண்ணேறு என்றும் சொல்லுவார்கள்.
ஒருவர் எதிர்பார்த்தது மற்றவர்களுக்குக் கிடைக்கும்போதோ, அல்லது ஒருவருக்கு ஏதேனும் நல்லது நடக்கும்போதோ… அதனால் மன உளைச்சல், ஆற்றாமை, பொறாமை என்றெல்லாம் உண்டாகும். இதுவே பொருமல். இதனால் ஏற்படுவதே கண் திருஷ்டி.
இந்த தீய எண்ணம் கண்கள் மூலம் திருஷ்டியாக வெளிப்படுகிறது. இதனால்தான் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும் என்று சொல்லிவைத்தார்கள்.
நமக்கோ அல்லது நம் குடும்பத்தில் இருப்பவர்களுக்கோ திருஷ்டியோ தோஷங்களோ ஏற்பட்டுள்ளதா என்பதைப் பல நிகழ்வுகள் மூலமும் சில அறிகுறிகள் மூலமும் தெரிந்து கொள்ளலாம்.
திருஷ்டி, தோஷத்தால் பாதிக்கப்பட்டவரின் வீட்டில் தொடர்ந்து ஏதாவது பிரச்சினைகள், தடைகள், சோகங்கள், சண்டை சச்சரவுகள், பிரிவுகள், நஷ்டம், பொருள் இழப்பு என ஏதேனும் ஒன்று வரிசையாக வந்துகொண்டே இருக்கும்.
ஒரு சிக்கல் தீருவதற்குள் அடுத்த பிரச்சினை வந்துவிடும். ‘அப்பாடா… பிரச்சினை தீர்ந்ததுடா சாமீ…’ என்று சொல்லி முடிப்பதற்குள்ளாகவே இன்னொரு சிக்கல் பூதாகரமாக வந்து நிற்கும். பெண்களுக்கு உடல் சோர்வு, மனச்சோர்வு, இல்லாத ஒன்றைக் கற்பனை செய்து பயப்படுதல்,
தம்பதி இடையே காரணமே இல்லாத பிரச்சினைகள், சந்தேகங்கள், உறவினர்களுடன் பகை, தடைப்பட்டுக் கொண்டே இருக்கும் சுபநிகழ்ச்சிகள், ஒருவர் மாற்றி ஒருவருக்கு மருத்துவச் செலவு, இஷ்டமானதே சமைத்திருந்தாலும் சாப்பிடப் பிடிக்காமல் போவது, எல்லோரிடமும் எரிந்து விழுவது, கெட்ட கனவுகள், தூக்கமின்மை, எதிர்மறை எண்ணங்கள் தோன்றுவது முதலானவை என சிக்கல் பிக்கல்களும் குழப்பத் தவிப்புகளும் இருந்துகொண்டே இருக்கும். இவையெல்லாமே கண் திருஷ்டியால் விளைபவை என்பதைப் புரிந்து உணரலாம்!
இப்படியான நிலை இருந்தால், வீட்டில் மீன் தொட்டி வைக்கலாம் என்றும் கருப்பு, சிகப்பு நிறங்களில் உள்ள மீன்களை அதில் வளர்க்கலாம் என்றும் தெரிவிக்கின்றனர், வாஸ்து சாஸ்திர நிபுணர்கள்.
வீட்டில் வாசலுக்கு எதிராக, கண் திருஷ்டி கணபதி படத்தை வைக்கலாம்.
இல்லத்தில், மெல்லிய வாத்திய இசையை அல்லது மந்திரங்களை ஒலிக்கச் செய்யலாம்.
வாசலில் கற்றாழை, சப்பாத்திக் கள்ளி, முள் அதிகம் உள்ள செடிகள், மஞ்சள் ரோஜா முதலானவற்றை வளர்க்கலாம்.
ஆகாசக் கருடன் என்று ஒரு வகை கிழங்கு உள்ளது. அதை வாங்கி மஞ்சள், சந்தனம், குங்குமம் வைத்து கருப்புக் கம்பளிக் கயிற்றில் கட்டி, வீட்டு வாசலின் மேற்பகுதியில் தொங்க விடலாம்.
வாரத்துக்கு ஒருமுறையேனும் கல் உப்பைக் குளிக்கும் தண்ணீரில் கொஞ்சமாகக் கலந்து குளித்து வரத் திருஷ்டியால் ஏற்படும் உடல் அசதி, சோம்பல் முதலானவை நீங்கும். அவரவர் பிறந்த கிழமையிலோ அல்லது செவ்வாய்க்கிழமையிலோ இப்படியாகக் குளிக்கலாம்!
வியாபாரத் தலங்களில் திருஷ்டி நீங்குவதற்கு எலுமிச்சை பழத்தை அறுத்து ஒரு பகுதியில் குங்குமத்தைத் தடவியும், மற்றொரு பகுதியில் மஞ்சள் பொடியைத் தடவியும் வைக்கலாம். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் இப்படிச் செய்வது நலம் தரும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். பழத்தை மாற்றும்போது முதலில் வைத்த பழத்தை மூன்று முறை கடையைச் சுற்றி தெருவில் வீசுங்கள்.
அமாவாசை, பவுர்ணமி, அஷ்டமி, நவமி முதலான நாட்களில் காலை, மாலை இருவேளையும் சாம்பிராணி பொடியுடன், கருவேலம்பட்டை பொடி, வெண் கடுகுத்தூள் ஆகியவற்றைக் கலந்து வீடு, கடை மற்றும் அலுவலகத்தில் தூப, தீப, புகை காட்டி வேண்டிக்கொண்டால், திருஷ்டியும் தீய சக்திகளும் வெளியேறும் என்பது உறுதி!