மத்திய அரசின் தேவையில்லாத ராணுவச் செலவீனங்கள், இமாலய ஊழல்கள், பொருந்தாத சந்தைப் பொருளாதாரம், 500,1000 ரூபாய்த் தாள் மதிப்பிழக்கம் எனச் சூறையாடப்பட்டு, தற்போது இந்தியப் பொருளாதாரம் அதள பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருப்பது நாம் அனைவரும் அறிந்ததே. இந்நிலையில், இயற்கை வளத்தையும் சூரையாடும் திட்டங்களும் மறுபுறம் அமைதியாய் நடைமுறைப்படுத்து வருகின்றது.
இயற்கையின் பெருங்கொடைகள் கிடைக்கப்பெற்றது, நமது காவிரி படுகைப் பகுதி. இதுதான் உலகில் அதிக பரப்பளவு கொண்ட ஒரு தொடர்ச்சியான சமவெளி வேளாண் பகுதியாகும்.
இந்த பகுதியில் உள்ளதஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில்தான் ஆழ்கிணறுகளைத் தோண்டி மீத்தேன் எடுக்க முடிவு செய்தது மத்திய அரசு. இதனால், தமிழகத்தின் நெற்களஞ்சியம் என்று அழைக்கப்படும் இப்பகுதியில் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்ற அடிப்படை புரிதலோ, அக்கறையோ மத்திய அரசுக்கு இல்லை.
கடந்த இருபத்தி எட்டு ஆண்டுகளாகத் தமிழகத்திற்கான காவிரி நீர் அநியாயமாக மறுக்கப்பட்டு, நிலத்தடி நீரை மட்டும் நம்பி விவசாயம் செய்யும் வானம் பார்த்த பூமியாகக் காவிரிப் படுகைப் பகுதிகள் கொஞ்சம் கொஞ்சமாக மாற்றப்பட்டு வருகின்றது. இந்த நிலையில்தான், இருக்கும் நிலத்தடி நீருக்கும் மொத்தமாக வேட்டு வைக்கும் மீத்தேன் எடுக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியது மத்திய அரசு.
தஞ்சை மற்றும் திருவாரூர் மாவட்டப் பகுதிகள் கூறு கூறாகப் பிரித்து மீத்தேன் எடுக்க மூன்று நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
அவை:
1.இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் (Oil and Natural Gas Corporation Ltd ONGC ) ,
2.இந்திய எரிவாயு மேலாண்மை நிறுவனம் ( Gas Authority of India Ltd GAIL )
3.கிழக்கத்திய எரிசக்தி நிறுவனம் ( Great Eastern Energy Corporation Ltd GEECL ).
இந்த நிறுவனங்கள் மூன்றுமே இந்தியாவில் அதிகமாக லாபம் சம்பாதிக்கும் நிறுவனங்களில் முதன்மையானவை. இவர்களுக்கு மக்களைப் பற்றிச் சிறிதும் அக்கறை கிடையாது. இந்த நிலத்தில் என்ன கிடைத்தாலும், அந்த நிலத்தில் எத்தனை மக்கள் வசித்தாலும் அவர்கள் அத்தனை பேரையும் அப்புறப்படுத்தி விட்டு அந்த நிலத்தில் கிடைக்கும் இயற்கை வளங்களைச் சுரண்டுவது தான் இவர்கள் நோக்கம்.
நிலத்தை தோண்ட உரிமை வழங்கி மீத்தேன் எடுப்பு வேலைக்கான சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் அனைத்து உதவிகளும் தர மாநில அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றை 04.01.2011 அன்று மு.க. ஸ்டாலின் முன்னிலையில் கையெழுத்திட்டுள்ளது. தஞ்சை மாவட்டத்தில் திருவிடைமருதூர், கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம் வட்டங்கள் திருவாருர் மாவட்டத்தின் குடவாசல், வலங்கைமான், நீடாமங்கலம், மன்னார்குடி வட்டங்கள் . மொத்த நிலப்பரப்பு : 691 சதுர கிலோமீட்டர்கள். இதில் 24 ச.கிமீ பரப்பு பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக ஒதுக்கப் பட்டுள்ளது. எஞ்சிய 667 ச.கி.மீ (166,210 ஏக்கர்கள்) மீத்தேன் எடுக்க தரப்பட்டுள்ளன. மொத்தம் 50 கிணறுகள் அமைக்கப்பட இருந்த ஊர்களின் விவரங்கள்.
கும்பகோணம் வட்டம்: கொத்தங்குடி, பெரப்பட்டி, வண்டுவாஞ்சேரி, திருச்சேறை, துக்காச்சேரி, ஆமங்குடி ,விட்டலூர், குமாரமங்கலம், நாச்சியார்கோயில்.
திருவிடைமருதூர் வட்டம். மஞ்சமல்லி, நரசிங்கம்பேட்டை.
ஒரத்தநாடு வட்டம் : குலமங்கலம்.
குடவாசல் வட்டம் : சித்தாடி, குடவாசல், மேலைப் பாளையம், மலுவச்சேரி, ஓகை, கீழப்பாளையூர், கமுகக்குடி, பத்தூர், கொரடாச்சேரி, ஆர்பார், மஞ்சக்குடி, வடவேர், செல்லூர்.
வலங்கைமான் வட்டம் : சாரநத்தம், மாணிக்கமங்கலம், கொட்டையூர், அனுமந்தப்புரம், கீலவடமல், ராசேந்திரநல்லூர், நார்த்தாங்குடி, கோயில் வெண்ணி, ஆதனூர், கண்டியூர்
நீடாமங்கலம் வட்டம் பூவனூர், கீழவாந்தச்சேரி (தண்டிலம்), அரிச்சபுரம், அனுமந்தப்புரம், அன்னவாசல், காளாச்சேரி.
மன்னார்குடி வட்டம்: கர்ணாவூர், வடபாதி, சேரன்குளம், மன்னார்குடி, அரவத்தூர், சவளக்காரன், மூவர்கோட்டை, பருத்திக்கோட்டை, களஞ்சிமேடு.
மீத்தேன் திட்டத்தால் நீர் வெளியேற்றப்படும்:
பாண்டிச்சேரி அருகே பாகூர் தொடங்கி நெய்வேலி, ஸ்ரீமுஷ்ணம், ஜெயங்கொண்ட சோழபுரம் வழியாக மன்னார்குடி வரை, காவிரிப் படுகையில் நிலத்துக்கடியில் 500 அடி முதல் 1650 அடி ஆழம் வரை வளமான நிலக்கரிப் படிமங்கள் உள்ளன. இந்தப் படிமங்களின் இடுக்குகளில் இருக்கும் மீத்தேன் எரிவாயுவை, நிலக்கரிப் படிமத்தின் மீது அழுத்திக் கொண்டிருக்கும் நிலத்தடி நீரை முற்றிலுமாக வெளியேற்றிவிட்டு, ’நீரியல் விரிசல்’ (Hydraulic fracturing) என்னும் முறையில் எடுப்பது தான் மீத்தேன் எடுக்கும் திட்டம்.
தஞ்சை, கும்பகோணம் , மன்னர்குடி பகுதிகளில் உள்ள
நஞ்சாகும் நீர்:
நிலத்துக்கடியில் 2000 அடிவரை துளையிட்டு, குழாய் இறக்கி, அதிலிருந்து பக்கவாட்டில் அனைத்துத் திசைகளிலும் இரண்டு கி.மீ. வரை குழாய்களைச் செலுத்தி, நிலக்கரிப் பாளங்களை நொறுக்கி, இடுக்கில் தங்கியிருக்கும் மீத்தேன் எரிவாயு எடுக்கப்படும். நிலக்கரிப் படிமத்தை நொறுக்க, நீரோடு மணலும் 600 வகை வேதிப்பொருட்களும் கலந்த ஒரு அபாயகரமான (BTEX) கலவை மிக அழுத்தத்துடன் உட்செலுத்தப்படும்.
கலவை நீரைக் கொண்டு விரிசல் ஏற்படுத்தும் இந்த ‘நீரியல் விரிசல்’ முறையில் உட்செலுத்தப்படும் இந்த வேதிக்கலவையில் (ஈயம், யுரேனியம், ரேடியம், மெத்தனால், ஹைட்ரோகுளோரிக் அமிலம், பார்மால்0டி-ஹைடு மற்றும் பென்சீன், புற்றுநோய் தாக்கும் கார்சினோஜன் பொருட்கள், இன்னும் பெயர் வெளியிடப்படாத பல வேதிப் பொருட்கள்) 30% மட்டுமே மீண்டும் வெளியே எடுக்கப்படும். மீதி 70% நச்சுக் கலவையும் வளமான வேளாண் பகுதியில் நிலத்துக்கடியில் தங்கிவிடும். இது நிலத்தை மட்டுமல்ல, நிலத்துக்கடியில் உள்ள நீர் முழுவதையும் நச்சாக்கும்
இந்தத் திட்டம் எண்ணிலடங்கா சிக்கல்களை உருவாக்கும்.
மீத்தேன் வாயுவின் உருகு நிலை மைனஸ் – 182.5 டிகிரி செல்சியஸ், அதன் கொதி நிலை என்பதும் மைனஸ் – 161.6 டிகிரி செல்சியஸ். அதாவது உலகின் மிக இயல்பு நிலையில் கூட (ரஷ்யா, அலாஸ்கா போன்ற பனி படர்ந்த இடங்களிலும் கூட) இது வாயு நிலையிலேயே இருக்கும். எந்நேரமும் எளிதில் தீப்பற்றிக் கொள்ளக் கூடியது என்பதும் இயற்கையான பச்சை உண்மை. தூந்திரப் பகுதியிலும் கூட இது நீருடன் கலந்து திட நிலையாக இருக்கின்றது. அவ்வளவுதான்.
மாசுபடும் நிலம்:
குறிப்பாக, நிலத்தடி நீர் ஒட்டு மொத்தமாக உறிஞ்சப்படுவதால் விவசாயம் செய்ய இப்போது இருக்கும் கொஞ்ச நீரும் கிடைக்காது. மீத்தேன் எடுப்பதற்காக உறிஞ்சி வெளியே கொட்டப்படும் நீர் கடல் நீரை விடப் பன்மடங்கு உப்புத் தன்மையுடையது. இந்த நீர் தற்போதுள்ள ஆறுகளிலும், குளங்களிலும் கலக்கும்போது விவசாய நிலம் உப்பளமாக மாறும்.
மீத்தேன் எடுக்கும்போது நிலத்தில் எற்படும் மாற்றங்களால் குடிநீரோடு இந்த மீத்தேன் எரிவாயு கலக்கும் ஆபத்து இருக்கிறது. சமீபத்தில் சென்னையில் எண்ணைக் குழாய்களில் ஏற்பட்ட கசிவால் குடிநீர் குழிகளில் வந்த நீர் தீப்பற்றி எரிந்ததை பத்திரிகைகளில் படித்திருப்பீர்கள். அது ஒரு சிறிய எண்ணைக் கசிவால் ஏற்பட்ட விளைவு. மாவட்டங்கள் முழுக்க எண்ணைக் குழாய்கள்அமைக்கப்பட்டால் என்னவாகும் என யோசித்துப் பாருங்கள்.மீத்தேன் எடுக்கும் பணியில் குழாயில் கசிவு ஏற்பட்டு மீத்தேன் வாயு சுற்றுப்புறத்தில் கலக்கும் ஆபத்து இருக்கிறது.
மீத்தேன் என்றால் என்ன:
கரிம நீரதை எனப்படும் Hydrocarbon வகையினைச் சார்ந்த மூலக் கூற்றினைக் (Molecular Formula) கொண்டதாக அறியப்படுவதே இந்த மீத்தேன் அல்லது மெத்தேன் எனப்படும் எரிவாயு. அத்துடன் மீத்தேன் என்பது எளிதில் தீப்பற்றக்கூடிய வாயு – அதாவது அதன் பண்பு நிலையானது மிகக் குறைந்த வெப்பத்திலேயே, தானே தீப்பற்றிக்கொள்ளும் தன்மை உடையது. இதனை ஆங்கிலத்தில் – Highly inflammable, Lower flash point என்பர்.
அப்படிக் கலந்தால் தஞ்சை திருவாரூர் ஒட்டு மொத்த மாவட்ட மக்களின் சுகாதாரம் பெருமளவில் பாதிக்கப்படும். நாம் சுவாசிக்கும் காற்று முழுக்க நஞ்சாக மாறும்.
நிலத்தின் அடியே குறுக்கும் நெடுக்குமாகத் தோண்டி வெடி வைப்பதால் தஞ்சை, திருவாரூர் மாவட்டம் முழுவதும் பூகம்ப ஆபத்து உருவாகும்.
இந்தத் திட்டத்தின் மூலம் நமது வழிபாட்டுத் தலங்கள், தஞ்சை பெரிய கோவில் உள்ளிட்ட சரித்திர சின்னங்கள், பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்டவை பெரும் ஆபத்துக்குளாகும்.
மீத்தேன் எடுக்கும் நிறுவனங்கள் உள்ளூரில் வேலை கொடுப்பதாகச் சொன்னாலும் அவர்கள்இந்த எரிவாயு எடுக்கும் அனுபவம் உள்ளவர்களையே பணியில் அமர்த்த முடியும்.இதன் மூலம் தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் பெருமளவு வெளிமாநில மக்கள் குடியேற்றப்படுவார்கள்.
தஞ்சை திருவாரூர் மாவட்டங்களின் மக்கள் தங்கள் சொந்த மண்ணிலேயே அகதிகளாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்படும்.
இந்த நிறுவனங்கள் தங்கள் எரிவாயுவை கொண்டு செல்லக் குழாய் பதிப்பது, சாலை அமைப்பது போன்ற பணிகளைச் செய்யும்போது ஏற்கனவே விவசாயம் செய்ய நமக்கு இருக்கும் கட்டமைப்புக்களான ஆறுகள், குளங்கள் போன்றவை இந்த நிறுவனங்களால் அழிக்கப்படும்.
இந்தக் குழாய்களில் கசிவு ஏற்பட்டால் குடிநீர் நஞ்சாக மாறுவது மட்டுமல்ல, இந்தக் குழாய்களில் ஏற்படும் சேதத்திற்கு நம் மீது தவறுதலாகத் தீவிரவாத வழக்குப் போடவும் வாய்ப்பு இருக்கிறது.
நம் நாட்டில் மண்ணிற்குக் கீழ் பதிக்கும் குழாய்கள் எளிதில் இயற்கை வேதியல் மாற்றத்தால் துருப் பிடிப்பது, அரிப்பெடுப்பது ஆகையால் விரைவாக நடந்தேறும். சாலைகளைப் பராமரிக்கும் நமது நாட்டின் லட்சணம் நமக்குத் தெரியும். மேலும் மிகக் கூடுதல் ஆழத்திலிருந்து இறைக்கப்படும் நீர் அங்கு உள்ள நிலக்கரிப் படிவங்களையும் சேர்த்து இழுத்து வெளிக்கொணரும். சோடியம் போன்ற உவர் நிலைத் தாதுக்கள் மிகுதியாக வெளியேறும்போது அது நிலத்தின் அடியில் நிலத்தின் தன்மையினை மாற்றிவிடும். இவ்வகை இயற்கை மாற்றம் நமக்கும் நம் பிள்ளைகளுக்கும் எந்நாளும் பயன் தாராது. நாம் மீண்டும் அதனைப் பழைய நிலைக்குக் கொண்டு செல்லவும் முடியாது. சரி வெளியேற்றப்பட்ட உவர் நீர் வெளியில் மேற்பரப்பில் உள்ள நிலத்தை அடியோடு அழிக்கும். இந்த நிலையும் வந்து விட்டால் மண்ணில் விதை போட்டால் நச்சு கூட விளையாது. மண் முழுவதும் நச்சு தான். பிறகு மீத்தேன் வாயுவிற்கு நிலத்தைத் கொடுத்த மக்கள் சொந்த நிலத்தில் கூட அகதி நிலையில் வாழ முடியாது. பின்பு வெளி மாநிலங்களில் சாலையோர வாழ்க்கை தான். இது மிகையல்ல. நிலமற்றவர்களின் நிலை இதுதான். அகதிகள் ஆவதற்கும் ஒரு தகுதி வரையறை உண்டு. அது தஞ்சை மாவட்ட மக்களுக்கு வருமா? மீத்தேன் வாயுவினைக் குழாய்களில் அடைத்துக் கொண்டு செல்வதும் கடினம். இது இரும்புக் குழாய்களை எளிதில் துருப்பிடிக்கச் செய்துவிடும். இதனை அவ்வப்போது ஆய்விற்கு உட்படுத்திப் புதுப்பிக்க வேண்டும்.
இயற்கை வளம் கொள்ளையடிக்க அரசு உடந்தை:
ஒரு கிணற்றிலிருந்து மீத்தேன் எடுக்க 400 லாரி மணலும், 400 டேங்கர் லாரி நீரும் தேவை. ஒரு கிணற்றுக்கு 5 நாட்கள் மீதேன் உறிஞ்ஜி எடுக்க 5 கோடியே 66 லட்சம் லிட்டர் நீர் தேவைப்படும். 50 கிணறுகளுக்கு 263 கோடி லிட்டர் நீர் தேவைப்படும். எதிர்காலத்தில் 2000 மீதேன் கிணறுகள் வரவுள்ளன. அப்படியெனில் எவ்வளவு நீர் பயன்படுத்தப்படும் என்பதை கணக்கீட்டுக் கொள்ளுங்கள். மேட்டூர் அணையின் மொத்த நீரையும் இந்தக் கிணறுகள் நான்கே மாதங்களில் தீர்த்துவிடும். எனவே இந்தத் திட்ட்த்திற்கு மொத்த தமிழகத்தின் தண்ணீரையும் நாம் தாரை வார்க்கப் போகின்றோம். விரைவில் தமிழகம் வறண்ட பாலைவனமாகும் என்றால் அது மிகையல்ல.
80 லட்சம் வீடுகள் கட்ட பயன்படும் அளவு மணல், மீத்தேன் திட்டத்திற்கு பயன்படுத்தப்படும். நம் எதிர்கால சந்ததிகள் குடிக்க நீருமின்றி குடியிருக்க வீடும்இன்றி வேறு இடங்களுக்கு அகதிகளாய் வெளியேறவேண்டியது தான்.
மொத்தம் 691 சதுர கி.மீ வேளாண் நிலத்தில் 2000 குழாய்கள்வரை அமைக்கப்படும். இதற்கான ஒப்பந்தம் கிரேட் ஈஸ்டர்ன் எனெர்ஜி கார்ப்பரேசன் என்னும் தனியார் நிறுவனத்திடம் தமிழக அரசு போட்டது. குறைந்தபட்சம் 6 லட்சம் கோடி மதிப்புள்ள எரிவாயுவை, 50,000 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் போட்டுள்ளனர். மக்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக அழித்து, தமிழகத்தின் வேளாண் தற்சார்பை ஒழித்து நமது மண்ணின் வளத்தைப் பெருமுதலாளிகள் சூறையாட, நமது அரசே ஒப்பந்தம் போட்டது.
மீத்தேன் எடுக்கும் அபாயகரமான திட்டத்தை எதிர்த்து இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் காவிரிப் படுகையில் கிராமம் கிராமமாகப் பிரச்சாரம் செய்து இத்திட்டத்தின் கொடிய விளைவுகளை மக்களுக்கு எடுத்துரைத்தார். மண்ணையும் மக்களையும் காக்க, தனது இறுதி மூச்சு வரை மீத்தேன் திட்டத்தை எதிர்த்து மக்களை ஒன்றிணைத்து களத்திலேயே தனது உயிரையும் துறந்தார் நம்மாழ்வார்.
இந்த விவகாரம் தொடர்பாகச் சென்னை உயர் நீதிமன்றத்தில் விவசாயிகள் தரப்பில் வழக்கு தொடரப்பட்டது. இதற்கிடையே, மீத்தேன் எரிவாயு எடுக்கத் தனியார் நிறுவனத்துக்கு அளித்த ஒப்பந்தத்தை மத்திய அரசு ரத்து செய்தது. அதன் பிறகு திட்டத்தின் நிலைகுறித்து மத்திய அரசு தெளிவுபடுத்தவில்லை.
ஷெல் (சிபிஎம்-நிலக்கரி படுகை எரிவாயு) திட்டத்தைப் பொருத்தவரை, தமிழகம் உள்பட நாட்டின் பல்வேறு மாநிலங்களிலும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களான ஓஎன்ஜிசி, ஓஐஎல் ஆகியவை மூலம் வளங்களை ஆய்வு செய்யச் சில பகுதிகள் ஒதுக்கப்பட்டது. அந்த ஆய்வு தற்போது தமிழகத்தில் மேற்கொள்ளப்படவில்லை.
மீத்தேன் திட்டத்திற்கு தமிழ்நாட்டில் “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்” கம்பெனியுடன் ஒப்பந்தம் போட்டு, திட்டத்தைக் கொண்டுவர காரணமாக இருந்த முன்னாள் துணை முதல்வர் மு.க ஸ்டாலின் மார்க் 2 2014ல், திருவாரூரில், விவசாயிகளிடம் மன்னிப்பு கோரினார். அவர் “இந்தத் திட்டத்தினால் விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்பு தெரியாமல் 2011-ல் ஒப்பந்தம் போட்டுவிட்டேன். இதற்கு ஒப்புதல் கொடுத்தது மத்திய காங்கிரஸ் அரசு தான்” எனக் கூறினார்.
தமிழகத்தில் திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் சுமார் 1.75 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்களில் திட்டத்தைச் செயல்படுத்த மத்திய அரசு உத்தேசித்திருந்தது. ஆனால் இந்தத் திட்டத்தால் வேளாண் விளை நிலங்களில் நிலத்தடி நீர் வெளியேறும் என்றும் அதன் விளைவாகப் பிற பகுதிகளில் வேளாண் சாகுபடி பாதிக்கப்படும் என்றும் விவசாயிகள் தரப்பில் அச்சம் தெரிவிக்கப்பட்டது.
தமிழகத்தில் மீத்தேன் திட்டத்திற்கு ONGC க்கு எந்த ஒரு புதிய திட்டத்திற்கும் அனுமதி வழங்கவில்லை என்று தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகப் பெட்ரோலியத் துறை இணையமைச்சர் தர்மேந்திர பிரதான், நவம்பர் 2016ல் தெரிவித்தார்
முன்னதாக மார்ச் 2015ல், பார்லிமெண்டில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி ரெங்கராஜனின் கேள்விக்குப் பெட்ரோலியம் அமைச்சர் தர்மேந்திர பிரதான் தமிழகத்தில் மன்னார்குடி பகுதியில் 667 சதுர கிமீ பரப்பளவு மீத்தேன் எரிவாயு தோண்டியெடுப்பதற்கான “கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன்” கம்பெனிக்குக் கொடுக்கப்பட்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படுகிறது எனவும் “மேலும் தமிழகத்தில் எந்த ஒரு இடத்திலும் மீத்தேன் எரிவாயு தோண்டி எடுப்பதற்காக ONGC நிறுவனத்திற்கு அனுமதி எதுவும் வழங்கவில்லை” எனவும் கூறியிருந்தார்.
மத்திய அரசு அளித்த விளக்கம்குறித்து, பா.ஜ.க.வின் எஸ்.ஆர். சேகர், “மீத்தேன் திட்டத்தைக் கருணாநிதி தொடங்கி வைத்தார் – ஜெயலலிதா தொடர்ந்தார்… காங்கிரஸ் கொண்டு வந்தது – பாஜக ரத்து செய்தது” எனப் பெருமையுடன் கூறினார்.
ஆனாலுன், இது பாஜகவின் பொய்வேடம். மீத்தேன் திட்டம் முற்றிலும் கைவிடப்படவில்லை. GEECL நிறுவனம் எந்த வேலையும் செய்யவில்லை என்பதால் தான், அந்த நிறுவனத்தின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது, முற்றிலுமாகக் கைவிடப்படவில்லை. எனவே இது தற்காலிகமான நிறுத்தம் தானென விமர்சனம் வைக்கப்பட்டது.
இப்போது இந்த விமர்சனத்தை உண்மையென நிரூபிக்கும் வகையில், மத்திய அரசு ஒரு புதிய திட்டத்தினை அறிவித்துள்ளது.
புதிய பாட்டிலில் பழைய சரக்கு:
புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு அருகேயுள்ள நெடுவாசல் உள்பட நாட்டின் 31 (28 இடங்கள் நிலத்திலும், 16 இடங்கள் கடலுக்கடியிலும் உள்ளன) இடங்களில் ஹைட்ரோகார்பன் (மீத்தேன்) எடுப்பதற்கு மத்திய அமைச்சரவை நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தது. இந்த 31 இடங்களில் இருந்து 40மில்லியன் மெட்ரிக் டன் எண்ணையும் மற்றும் எரிவாயு 22.0 பில்லியன் மீட்டர் கியூப் ஹைட்ரோகார்பன் எரிவாயுவும் , சுமார் 15 ஆண்டுகளில் எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளது. 43 இந்திய கம்பெனிக்களுக்கும், 4 அந்நிய நிறுவங்களும் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்து இருந்தன. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக என பிப்ரவரி 15 அன்று மத்திய அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் 13 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க பாஜக அரசு அனுமதி வழங்கியுள்ளது. இந்த ஹைட்ரோ கார்பன் என்பது மீத்தேன் , ஈதேன், ப்ரோபேன்…. போன்ற வாயுக்களின் பொதுப்பெயர். இந்த பெயரில் தான் தற்போது, பாஜக அரசு இரண்டு நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
காரைக்காலில் பாரத் பெட்ரோலிய நிறுவனத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மீத்தேன் திட்டத்தை மீண்டும் ஹைட்ரோ கார்பன் என்ற பெயரில் அனுமதித்துள்ளது மத்திய அரசு. தொடர்ந்து தமிழகத்திற்கு எதிராகவும், ஏமாற்றும் நோக்கிலும் செயல்பட்டு வருகிறது மத்திய அரசு.
நெடுவாசல் பகுதி விவசாயிகளின் கருத்தினை கேட்காமலேயே மத்திய அமைச்சரவை இந்தத் திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது அதிர்ச்சி அளிக்கிறது. இத்திட்டம் குறித்து எதையும், சம்பந்தப்பட்ட நிறுவனம் பொதுமக்களுக்கு தெளிவுபடுத்தவில்லை என்பது குறிப்பட்த்தக்கது. மக்கள் மீண்டும் போராடத் துவங்குவர்.
தமிழகத்தின் தற்சார்பு வேளாண் உற்பத்தியையும், தமிழக மக்களின் வாழ்வையும் மொத்தமாகச் சிதைக்கும் வேலைகளை இந்திய அரசு தொடர்ந்து திட்டமிட்டு செய்து வருகிறது. பொதுவாக மக்கள் வாழ்விடங்களில் இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவது இல்லை. பல்லாயிரம் ஆண்டுகளாக உண்டு உடுத்தி, உறைந்து, விவசாயம் செய்து வாழ்ந்து வரும் தொல்குடி மக்கள் சமுதாயத்தை, உடமையற்றவர்களாகவும், அவர்கள் சந்ததியினர் நிலமற்றவர்களாகவும் ஆக்குவது என்பது அறிவுடைமை ஆகாது. மேலும் மிகமிகக் குறைந்த அளவு மட்டுமே படிவங்களுள்ள இந்த நிலத்தைச் சூரையிடுவது உள் நோக்கம் கொண்டதாகவும் உள்ளதாகவே தெரிகின்றது. காவிரியை வறண்டுவிடச் செய்து அந்த நிலையில் மக்கள்மீது இந்தத் திட்டத்தைத் திணிப்பது என்பதை என்ன சொல்வது? மக்கள், கட்சி வாரியாகப் பிரிந்து சிந்திக்காமல் தங்கள் எதிர்கால சந்ததியினரின் வாழ்வாதாரம் குறித்து சிந்தித்தால் நல்லது.
வளர்ச்சி என்ற பெயரில் முன்மொழியப்படும் இது போன்ற திட்டங்கள், கண்டிப்பாக மக்களின் வளர்ச்சிக்காக அல்ல. இவை, மக்களை வாழவும் கூட விடாமல் விரட்டியடிக்கும் திட்டங்கள்.
அப்படியென்றால் இவை யாருடைய வளர்ச்சிக்கான திட்டங்கள்?
விவசாயத்தை அழிக்க வரும் இத்திட்டங்களின் உண்மைப் பின்னணி என்ன?
மீத்தேன் எடுப்பதோடு இது நின்று விடுமா?
அரசுக்கு நட்டம் என்று தெரிந்தே மீத்தேன் எடுப்பதன் உள்நோக்கம் என்ன?
பசுமைத்திட்டம் எனும் போலி விளம்பரம்:
மீத்தேன் வாயு சூழல் வெப்ப உயர்வை உண்டாக்கும் மோசமான வாயு. அதனை எடுத்து எரிப்பதால் சூழல் மேன்மை பெறும் என்றும் மீத்தேன் மாசுபாடுகள் அற்ற தூய்மையான எரிபொருள் என்றும் கம்பெனி எடுத்துக் கூறுகின்றது.நிலக்கரிப்படுகை மீத்தேன் எடுப்பது ஒரு பசுமைத் திட்டம் என கம்பெனி பொய்யான விளம்பரம் செய்கின்றது.
இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும். விவசாயத்தையே அடிப்படையாக கொண்டுள்ள மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படும்.இதனால் மத்திய, மாநில அரசுகள் உடனடியாக இத்திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.
விளைநிலங்களை வீணடித்து நமது மக்களின் வாழ்வாதாரத்தைப் பறித்துக் கொள்ளும் பகல் கொள்ளைகள்பற்றி மக்களிடையே சரியான புரிதலை உருவாக்க வேண்டும்.
நிலம், நீர், மணல் நஞ்சாக்கி ஹைட்ரோ கார்பன் /மீத்தேன் திட்டம் செயல்படுத்துவது
கண்ணை விற்று ஓவியம் வாங்குவதற்கு சமம்.