ட்விட்டர் நிறுவனத்தில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்ட நிலையில் அடுத்ததாக மார்க் ஜுக்கர்பெர்க் தலைமையிலான மெட்டா நிறுவனம் இதுபோன்ற ஒரு நடவடிக்கைக்கு தயாராகி வருவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து செய்தி வெளியிட்டுள்ள ‘தி வால் ஸ்ட்ரீட் ஜேர்னல்’ இந்த வாரம் புதன்கிழமை முதல் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய நிறுவனங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்யும் பணி தொடங்க உள்ளதாக கூறியுள்ளது.

செப்டம்பர் மாத நிலவரப்படி மெட்டா நிறுவனத்தில் மொத்தம் 87000 பேர் பணிபுரிவதாக தெரிகிறது. பணி நீக்க நடவடிக்கையால் பல்வேறு நாடுகளில் உள்ள ஆயிரக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அஞ்சப்படுகிறது.

வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் குறிப்பிட்டுள்ளது போல் பணிநீக்கம் நடைபெற்றால் இது அந்த நிறுவனத்தின் 18 ஆண்டுகால வரலாற்றில் முதல் முறையாக நடைபெறும் ஆட்குறைப்பு நடவடிக்கையாக இருக்கும் என்று கூறப்படுகிறது.

மெட்டா நிறுவனம் வருவாய் இழப்பை சந்தித்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த ஆண்டுக்கான மூன்றாவது காலாண்டிலும் நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. மெட்டா நிறுவனம் தொடர் சரிவை சந்தித்து வருவது அதன் முதலீட்டாளர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.