சென்னை: நாளை (ஜூன் 17ந்தேதி) 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதியை பள்ளிக்கல்வித்துறை மாற்றி உள்ளது. அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் 20ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
ஏற்கனவே மாணவர்களின் தேர்வு, பள்ளிகள் திறப்பு, எல்கேஜி, யுகேஜி போன்ற விவகாரங்களில் உறுதியான தகவல்களை தெரிவிக்காமல், பள்ளி ஆசிரியர்களையும், பொதுமக்களையும் குழப்பி வந்த பள்ளி கல்வித்துறை, தற்போது தேர்வு முடிவுகளையும் மாற்றி அறிவித்து உள்ளது. குழப்பத்தின் மறுஉருவமாக பள்ளி கல்வித்துறையும், கல்வி அமைச்சர் அன்பில் மகேஸும் செயல்பட்டு வருகிறார்கள்.
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ், ஏற்கனவே 10, 11, 12ம் வகுப்பு தேர்வு முடிகள் குறித்து அறிவித்திருந்தார். அதன்படி, 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 17ஆம் தேதிவெளியிடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 23-ஆம் தேதி வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும், தேர்வு முடிவுகள் திட்டமிட்டப்படி நாளை வெளியாகும் என்றும் நேற்று அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி மாற்றம் செய்து இன்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தற்போது அறிவித்துள்ளது.
அதன்படி, 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வரும் ஜூன் 20-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது.
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகளை (S.S.L.C) 20.06.2022 (திங்கட்கிழமை) நண்பகல் 12.00 மணிக்கு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் சென்னையில் வெளியிடுகிறார்.
பொதுத்தேர்வு முடிவுகளை மாணவர்கள் http://tnresults.nic.in, http://dge2.tn.nic.in, http://dge.tn.gov.in ஆகிய இணையதள பக்கத்தில் தெரிந்துக் கொள்ளலாம்.
இதுபோன்று, ஜூன் 20 காலை 9.30 மணிக்கு 12-ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.
10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் முதல்முறையாக ஒரே நாளில் வெளியிடப்படுகிறது. தமிழ்நாடு முழுவதும் அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.