கரூர்:

நடிகர் விஜய் நடித்துள்ள ‘மெர்சல்’ என்ற திரைப்படம் தீபாவளி அன்று வெளியானது. இதில் ஜி.எஸ்.டி.க்கு எதிரான கருத்துகள் இடம் பெற்றுள்ளன. இதற்கு பாஜக நிர்வாகிகள் கடும் கண்டனம் தெரிவித்தனர். தமிழகம் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இப்பிரச்னை விஸ்வரூபம் எடுத்தது.

மெர்சலில் இடம்பெற்று உள்ள காட்சிகளை நீக்கவேண்டும் என்ற கோரிக்கையும் பாஜக தரப்பில் வழுத்தது. மாறாக எதிர்க்கட்சிகள் மற்றும் திரையுலக பிரபலங்கள் மெர்சல் காட்சியை நீக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தன. பிரச்சனை தொடர்ந்து நீடித்த நிலையில் பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் இன்று நிருபர்களிடம் கூறுகையில், ‘‘மெர்சல் பட விவகாரம் சுமுகமாக முடிவுக்கு வந்து விட்டது. மத்திய குழு வந்த பிறகு டெங்கு காய்ச்சல் பரவாமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. டெங்குவை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது.

இன்னும் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக மீனவர்களின் பிரச்சனைளை களைய வேண்டும். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். எனக்கு தொலைபேசியில் விடுக்கப்படும் மிரட்டல்களுக்கு அஞ்சமாட்டேன்’’ என்றார்.