சென்னை

சென்னை கிண்டியில் உள்ள ஆளுனர் மாளிகைக்கு பொருட்கள் வாங்காமலே போலி பில்கள் அளித்து ரூ. 10 கோடிக்கு மேல் மோசடி செய்ததாக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள ராஜ் பவன் எனப்படும் ஆளுநர் மாளிகையில் ஃபர்னிச்சர்,  மற்றும் சுவரில் மாட்டும் அழகுசாதனப் பொருட்கள் அனைத்தும்  அடையாறு எல் ஜி சாலையில் உள்ள ஒரு பிரபல நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுகிறது.  இவை அனைத்தும் கடந்த 15 ஆண்டுகளாக இந்த ஒரே நிறுவனத்திடம் இருந்து வாங்கப்படுகிறது.   சுர்ஜித் சிங் பர்னாலா ஆளுனராக இருந்த காலத்தில் இருந்து அனைத்து பொருட்களும் இந்த நிறுவனத்திடம் இருந்தே வாங்கப்பட்டு வந்தது.  இந்த நிறுவனம் முகமது யூனுஸ் என்பவரால் நடத்தப்பட்டு வருகிறது

தமிழக ஆளுனர் மாளிகையில் புதிய செயலாளராக தற்போது ராஜகோபால் பதவி ஏற்றார்.    அவர் ஆளுனர் மாளிகையின் கணக்குகளை சரி பார்த்த போது இந்த நிறுவனம் வாங்காத பல பொருட்களுக்கு போலி பில்கள் அளித்து பணம் பெற்றுள்ளது தெரிய வந்தது.   உடனே ராஜகோபால் இதை தற்போதைய ஆளுனர் பன்வாரிலால் புரோகித் இடம் தெரிவித்தார்.   ஆளுனர் இந்த கணக்குகளை கவனிக்கும் துணை செயலாளர் சவுரிராஜனை இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டார்.

அந்த விசாரணையில் கடந்த 5 ஆண்டுகளாக வாங்கப்பட்ட நாற்காலிகள், சோஃபாக்கள்,  சுவர் அழகு சாதனங்கள்,  மெத்தை, படுக்கை விரிப்புகள், தலையணைகள் உட்பட அனைத்தும் கணக்கு எடுக்கப்பட்டது.     அதில் ஏற்கனவே உள்ள பொருட்களுக்கு புதியதாக வாங்கியதாக கணக்கு காட்டி பணம் பெற்றுள்ளது தெரிய வந்துள்ளது.    கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 10 கோடிக்கு மேல் இதுபோல் முகமது யூனுஸ் மோசடி செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதற்கு ஆளுனர் மாளிகையை சேர்ந்த அதிகாரிகளும் உடந்தை என்பதும் கண்டு பிடிக்கப் பட்டதால் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கைக்கு ஆளுனர் உத்தரவிட்டார்.    தொழிலதிபர் யூனுஸ் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.   காவல்துறையினர் அவரது விற்பனை நிலையத்தை சோதனை இட்டதில் அவருடைய மோசடிக்கான ஆவணங்கள் சிக்கின.   அதையொட்டி அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆளுனர் மாளிகை அதிகாரி ஒருவர், “முகமது யூனுச் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ. 10 கோடிக்கு மேல் மோசடி செய்துள்ளார்.    மொத்தம் இவர் 15 ஆண்டுகளாக சுர்ஜித்சிங் பர்னாலா, ரோசையா, வித்யாசாகர் ராவ் உட்பட 3 ஆளுனர்களிடம் மோசடி செய்துள்ளார்.   அந்த முழுக் கணக்கு இன்னும் கண்டு பிடிக்கப் படவில்லை.  அது குறித்து ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.   மூன்று ஆளுனரை ஏமாற்றியவர் நான்காமவரிடம் சிக்கிக் கொண்டார்”  எனக் கூறினார்.