சென்னை: மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் எந்தவித ஆவணமுமின்றி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என தமிழகஅரசு அறிவித்து உள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு நவீன மற்றும் மேம்படுத்தப்பட்ட மருத்துவ வசதிகளை அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் கட்டணமில்லாமல் வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசால் கடந்த 2009ம் ஆண்டு கலைஞர் காப்பீட்டுத் திட்டம் தொடங்கப்பட்டது. இதையடுத்து இந்த திட்டம் முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. தொடர்ந்து, கடந்த 2018ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இந்திய அரசின் சுகாதாரத்துறையுடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டுத் திட்டம், யுனைடெட் இந்தியா இன்ஸ்யூரன்ஸ் கம்பெனி நிறுவனம் மூலம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவி ஏற்றதும் இந்த திட்டத்தில் மேலும் பல முக்கிய நோய்களுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் திட்டங்கள் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் குடும்ப அட்டை, வருமான சான்றிதழ் உள்ளிட்ட எந்தவித ஆவணமுமின்றி முதலமைச்சர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தில் இணையலாம் என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.