விழுப்புரம்: மறைந்த முன்னாள விவசாயத்துறை அமைச்சர் ஏ கோவிந்தசாமி திருவுருவ சிலையுடன் அரங்கம் அமைக்கப்படும் என தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று அமைச்சர் சாமிநாதன் அறிவித்தார்.

இதற்கு நன்றி தெரிவித்து விழுப்புரம் முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும், மறைந்த முன்னாள் அமைச்சர் ஏ கோவிந்தசாமியின் மகனுமான ஏ.ஜி.சம்பத் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

இன்று சட்டப்பேரவையில் என் தந்தை மறைந்த விவசாயத்துறை அமைச்சர் ஏ கோவிந்தசாமி அவர்களுக்கு திரு உருவசிலையுடன் அரங்கம் கட்டப்படும் என்று மாண்புமிகு தமிழக முதல்வர் அறிவித்துள்ளார் அவர்களுக்கு என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் 15 வயது சிறுவனாக இருந்தபோதே அவருடைய அரசியல் ஆர்வத்தை பார்த்து எதிர்காலத்தில் இந்த சிறுவன் ஒரு அரசியல்வாதியாக வருவார் என்று முதன்முதலில் கணித்து சொன்னவர் என் தந்தையே கோவிந்தசாமி அவர்கள்.

தன் வாழ்நாள் முழுவதும் ஒரு தூய்மையான அரசியல் பணி செய்தவரும் கரைபடியாத கரத்துக்கு சொந்தக்காரர் ஏ கோவிந்தசாமி அவர்கள் தன் மரண வாக்கு மூலத்தில் நான் ஏழையாக பிறந்தேன் ஏழையாக சாகிறேன் நான் யாரிடத்திலும் லஞ்சம் வாங்கியது கிடையாது என்று சொல்லிவிட்டு மறைந்தார். அப்படிப்பட்ட தலைவருக்கு இன்று சிலை மற்றும் அரங்கம் கட்ட அறிவித்திருக்கிறார் முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள்.

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது திமுக தலைவராக இருந்த அறிவித்த வாக்குறுதியை இன்று தமிழக முதல்வராக அறிவித்திருக்கிறார் இதை நல்லபடியாக நிறைவேற்றுவார் என்று நான் நம்புகின்றேன்.  அவர் அளித்த வாக்குறுதியை மறக்காமல் நினைவுபடுத்தி என்று சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது பாராட்டுக்குரிய செயலாக நான் கருதுகிறேன் எனவே முதல்வர் அவர்களை பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன் என் நன்றியை இந்த அறிக்கையின் மூலமாக தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.