“நாட்டில் எவ்வளவோ பிரச்சினைகள் இருக்கும் போது, மீம்ஸ் எல்லாம் ஒரு பிரச்சினையா” என்று வைகோவுக்கு சீமான் பதில் அளித்துள்ளார்.
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “நாம் தமிழர் கட்சி சீமான் ஆதரவாளர்கள் என்னை தெலுங்கன் என்று சொல்லி மீம்ஸ் பதிவிட்டு வருகிறார்கள். எட்டு வருடங்களாக பொறுத்து வருகிறேன். பொய்யாக மீம்ஸ் போடுவது அநாகரீகமானது” என்றார்.
மேலும், “பிரபாகரனுடன் சீமான் இருக்கும்படியான புகைப்படம் போலியாக உருவாக்கப்பட்டது. விடுதலைப்புலிகள் பெயரைச்சொல்லி வெளிநாட்டில் வசிக்கும் ஈழத்தமிழர்களிடையே நிதி வசூல் செய்கிறார் சீமான். பிரபாகரன் இல்லை என்று நினைத்துக்கொண்டு அவர்களது கொடியை தன் கட்சி கொடியாக பயன்படுத்துகிறார்” என்றும் வைகோ குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில் மீம்ஸ் குறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், “ அது பிரச்சினை யில்லாத பிரச்சினை. இதற்கெல்லாமா கோப்ப்படுறது? எங்களைப் பற்றி எத்தனையோ பேர் மீம்ஸ் போடுறாங்க. சிரிச்சிக்கிட்டே கடந்துட்டு போறதுதான் சரி. காவரி, ஸ்டெர்லைட் போன்றவைதான் பிரச்சினை. மீம்ஸ் எல்லாம் பிரச்சினை இல்லை” என்றார் சீமான்.