சென்னை: மேகதாது விவகாரம் தொடர்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தில் விவாதிக்கப்படும் என அதன் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ள நிலையில், அமைச்சர் துரைமுருகன் தலைமையில் இன்று அனைத்துக் கட்சி குழு டெல்லி பயணமாகின்றனர்.
காவிரியில் மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு தொடர்ந்து முயற்சித்து வருகிறது. இதுகுறித்து காவிரி மேலாண்மை கூட்டத்தில் விவாதிக்க வேண்டும் என வலியுறுத்தி வருகிறது. இதற்கு தமிழகஅரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. மேலும், மேகதாது அணை விவகாரம் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் மேகதாது அணை குறித்து காவிரி மேலாண்மைக் கூட்டத்தில் விவாதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். மேலும்,மேகதாது அணையை கர்நாடகா அரசு கட்ட நினைப்பது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிரானது,தமிழக விவசாயிகளுக்கு செய்யும் துரோகம் என்றும்,தமிழக அரசின் சட்டப் போராட்டம் உச்சநீதிமன்றத்தில் தொடரும் என்றும் முதல்வர் தெரிவித்திருந்தார்.
ஆனால், வரும் 23ந்தேதி நடைபெற உள்ள காவிரி மேலாண்மை ஆணைய கூட்டத்தில் மேகதாது குறித்து விவாதிக்கப்படும் அதன் தலைவர் ஹல்தர் தெரிவித்துள்ளார். நாங்கள் எந்த மாநிலத்திற்கும் ஆதரவாக இல்லை என்று கூறியவர், காவிரி மேலாண்மை ஆணையம் சுதந்திரமான அமைப்பு, அதில் மாநிலங்களுக்கு இடையே எழுந்துள்ள நீர் விவகாரம் குறித்து விவாதிக்கலாம், இதில், யாரும் எங்களை நிர்பந்திக்க முடியாது என்றும் தெரிவித்திருந்தார்.
இதனைத் தொடர்ந்து, தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகனுடன் அனைத்துக் கட்சி குழுவானது இன்று டெல்லி செல்கிறது. அதன்பின்னர்,இக்குழுவானது மத்திய நீர்வளத்துறை அமைச்சரை சந்தித்து மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கு அனுமதி தரக்கூடாது என வலியுறுத்தவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.