ரிமளம் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில், புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

அரி என்றால் சந்திரன், மழ என்றால் குழந்தை என்று பொருள். முழு நிலவாக இருந்த சந்திரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தால், குழந்தை போல் சிறுவடிவாகி குறுகி கொண்டே வந்தார். இதனால் அனைத்து சக்திகளையும் இழந்து வில்வமரம் அடர்ந்து இருக்கும் பகுதியான அரிமழம் வந்தார். சிவபெருமானிடம் சந்திரன் சாபவிமோசனம் வேண்டினார். இதனால் இறைவன் சந்திரனை தன் தலைமீது சூடிக் கொண்டு சாப விமோசனம் தந்தார். சுந்தரேசப் பெருமானின் திருவருளால், அவருடைய சடைமுடியில் இளம்பிறையாகி (அரிமளமாகி) சந்திரன் அமர்ந்து இழந்த சக்திகளை மீண்டும் பெற்றார்.

இதனால் சந்திரன் இவ்வூர் அரிமளம் என்ற பெயரால் அழைக்க அருள்புரிய வேண்டும், என்றும் சிவபெருமானிடம் வேண்டிக் கொண்டார். சிவபெருமானும் அவ்வாறே அருள்புரிந்ததால் அரிமளம் என்ற பெயர் ஏற்பட்டது. அரும்பள்ளம் என்ற சொல்லே மருவி அரிமளம் என்று ஆயிருக்கலாம் என்றும், இங்குள்ள விளங்கியம்மன் சன்னதியில் ஏரழிஞ்சிப்பழம் என்ற அரிய வகை காணப்பட்டதால் அரும்பழம் என்று பெயர் ஏற்பட்டு அரிமளம் என்று மருவியதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

அன்னை பார்வதி தேவியே மீனாட்சியாக மானிட அவதாரம் எடுத்து, பூமிக்கு வந்தாள். விசுவாவசு எனும் கந்தர்வனுக்கு, வித்யாவதி என்ற மகள் இருந்தாள். இவள், பார்வதி தேவியின் தீவிர பக்தை. அம்பாளின் தரிசனம் பெற விரும்பி, தந்தையிடம் விருப்பத்தைத் தெரிவித்தாள். பூலோகத்திலுள்ள கடம்பவனத்தில் தங்கி, பார்வதி தேவியை எண்ணி தவமிருந்தால், அம்பாளின் தரிசனம் பெறலாம் என தந்தை கூறினார். அதன்படி, வித்யாவதி கடம்பவனத்தில் தவமிருந்தாள். வித்யாவதி, பார்வதி தேவியை தன் தாயாக மட்டுமின்றி, மகளாகவும் கற்பனை செய்தாள்.

கடம்பவனத்தில் இருந்த கோவிலில், அம்பாள் சன்னிதியில் பல சேவைகளைச் செய்து வந்தாள். பார்வதி தேவி, அவள் முன் தோன்றி, அருள்பாலித்து உனக்கு என்ன வரம் வேண்டும் என்று கேட்டாள். “உன்னை என் பிள்ளை போல எண்ணி, உனக்கு பணி செய்தேன். நிஜத்தில், “நீ எனக்கு பிள்ளையாக வேண்டும்” என்று வரம் கேட்டாள் வித்யாவதி; பார்வதி தேவியும் “வித்யாவதி… நீ அடுத்த பிறவியில், சூரசேனன் என்ற சோழராஜனின் மகளாகப் பிறந்து, மதுரையை ஆளும் மலையத்துவச ராஜாவை திருமணம் செய்வாய், உனக்கு மகளாய் பிறப்பேன். பின்னர், தம்பதி ஆகிய நீங்கள் இருவரும் மீண்டும் பிறவா வரம் பெறுவீர்கள் என்று வரம் அளித்தால் அம்பாள்”.

அடுத்த பிறவியில், இவர்களது மகளாக யாக குண்டத்தில் இருந்து பிறந்தாள் மீனாட்சி. தெய்வத்தை உளப்பூர்வமாக வணங்கினால், அது, நம் வீட்டுக்கே சொந்தம் கொண்டாட வந்து விடும் என்பதற்கு உதாரணம் மீனாட்சியின் பிறப்பு. மீனாட்சி வளர்ந்து வரும் போது பல கலைகளை கற்றுத் தேர்ச்சி பெற்று இருந்ததால், மதுரையை ஆளும் பொறுப்பைக் மன்னர் கொடுத்தார். நல்லாட்சி நடத்திய மீனாட்சி, பல நாடுகளை வென்று சிவலோகத்தையே கைப்பற்றச் செல்லும் திக்விஜயம் போது கயிலாயத்தில் சிவனைக் கண்டாள், மீனாட்சியை மணக்க, சிவன் மதுரைக்கு வந்தார்.

திருமணத்திற்கு பின்பு, மதுரையை ஆளும் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். மீனாட்சி – மதுரையின் அரசி ஆவாள். இந்தப் பெயர் வரக்காரணம் அம்பாளின் கண்களின் மகிமையால் தான். காசி விசாலாட்சியை, “விசாலம்+அட்சி” என்று பிரிப்பர். “அட்சம்” என்றால் கண்கள். விசாலமான கண்களால் உலகைப் பாதுகாப்பவள் என்றும், காஞ்சி காமாட்சியை, “காமம்+அட்சி” என்று பிரிப்பர். “பக்தர்களின் விருப்பங்களை, தன் கண் அசைவிலேயே நிறைவேற்றுபவள்” என்றும், மதுரை மீனாட்சியை, “மீன்+அட்சி” என்று பிரிப்பர். மீன் போன்ற கண்களால், பக்தர்களுக்கு அருள்பவள் என்று பொருள்.

விசாலாட்சி, காமாட்சி இருவருக்கும் இல்லாத தனிச்சிறப்பு, மீனாட்சிக்கு உள்ளது. விசாலாட்சி, காமாட்சி இருவருக்கும் கண்கள் இமைக்க வாய்ப்புண்டு; ஆனால், மீனின் கண்கள் இமைப்பதில்லை. மீன் இமைக்காமல், தன் குஞ்சுகளைப் பாதுகாக்கும் தன்மையுடையது. அதுபோலவே, கயற்கண்ணியான மீனாட்சியும், தன் பக்தர்களை இரவும், பகலும் கண்கள் இமைக்காமல் விழித்திருந்து பாதுகாக்கிறாள் என்பது நம்பிக்கை. மதுரை மீனாட்சியின் கண்கள் இமைப்பதில்லை என்பதால் தான், மதுரையும் தூங்கா நகராக விளங்குகிறது.

மீனாட்சி சுந்தரேஸ்வரர் தலத்தில் மார்ச் 19ல் இருந்து 21 வரை சிவலிங்கம் மீது சூரிய ஒளிபட்டு பிரகாசிக்கும் அற்புத நிகழ்ச்சி நடைபெறும். இத்தலத்தில் ஜாதகத்தில் குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த தலம் ஆகும். ஆனால், அவ்வாறு தத்து கொடுக்கும் நபருக்கு வேறு கோவிலில் எந்த வேண்டுதலும் பாக்கி இருக்கக் கூடாது என்றும் அவ்வாறு இருந்தால், அந்த வேண்டுதலை நிறைவேற்றிய பின்பு தான் இங்கு வந்து தத்து கொடுக்க வேண்டும் என்பது ஐதீகம்.

கிரக ரீதியாகவோ, ஜாதக ரீதியாகவோ குழந்தைகளுக்கு தோஷம் இருந்தால் அவர்களை இறைவனுக்கு தத்து கொடுத்து வாங்க உகந்த ஸ்தலம் இது.