சென்னை: மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைப்பார் என சுகாதாரச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில்  கொரோனா தடுப்பூசி போடும் முகாமை ஆய்வு செய்த தமிழ்நாடு மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,

தமிழகத்தில் சில மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகரித்துள்ளது. இதனால் கொரோனா தடுப்பு விதிகள் முறையாக பின்பற்றப்படுகின்றதா என்ற கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது” . தமிழகத்தில் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.  கோவாக்சின் தடுப்பு மருந்து எல்லாருக்கும் கிடைக்கும் வகையில் துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தற்போது 2வது டோஸ் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திற்கு இதுவரை 2.54 கோடி கொரோனா தடுப்பூசி வந்துள்ளது . தமிழகத்துக்கு இந்த மாதம் 29 லட்சம் தடுப்பூசிகளை தருவதாக மத்திய அரசு கூறியுள்ளது.  இதுவரை 2.2 கோடி டோஸ் கொரோனா தடுப்பூசி மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் சில மாவட்டங்களில் தினசரி கொரோனா தொற்று திடீர் உயர்ந்து வருகிறது . தொற்று பரவும் இடங்களில் மினி நோய் கட்டுப்பாடு பகுதி அறிவிக்கப்பட்டுள்ளது.  கோவையில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் புதிய கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் யாரும் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தல் செய்யப்பட்டுள்ளது. கடைகள் திறப்பதற்கு நேரக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல மக்கள் கூட்டத்தை தடுக்க கோயிகளுக்கு பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, மக்களை தேடி மருத்துவம் திட்டம் தொடங்கப்பட உள்ளது.  நாளை தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்  இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின்படி, மக்களின் வீடுகளுக்கு சென்று சிகிச்சை அளிப்பதே இதன் நோக்கம், அதை சுகாதாரப்பணியாளர்கள் செய்வார்கள் என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.