சென்னை: திமுக தலைமையிலான கூட்டணியில் இன்னும் கூட்டணி கட்சிகளுக்கு தொகுதி ஒதுக்கீடு முழுமையா முடியாத நிலையில், பல்வேறு யூகங்கள் எழுந்துள்ளன. இந்தநிலையில், செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, கமல் தலைமையிலான கூட்டணிக்கு மதிமுக செல்லாது என தெரிவித்தார்.
திமுக தலைமையில் இடம்பெற்றுள்ள கட்சிகளில், விசிக, முஸ்லிம் லீக், மனிதநேய மக்கள் கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகட்சிகள், மதிமுக உள்பட சில கட்சிகளுடன் நடைபெற்ற தொகுதி ஒதுக்கீடு பேச்சுவார்த்தை முடிவுக்கு வராமல் இழுபறி நீடித்து வருகிறது.
இதைத்தொடர்ந்து, இன்று மீண்டும் சில கட்சிகளுன் திமுக தொகுதி பங்கீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் இந்தியன் யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதியும் ஒதுக்கீடு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும், காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , இந்தியன் கம்யூனிஸ்ட், மதிமுக ஆகிய கட்சிகளோடு உடன்பாடு எட்டவில்லை.
மதிமுகவோடு திமுக 2 கட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் உடன்பாடு எட்டவில்லை என்பதால் அக்கட்சி அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியாகியது. பேச்சுவார்த்தை முடிந்து வெளியில் வந்த மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா, தனிச்சின்னத்தில் தான் போட்டியிடும் என்று கூறியிருந்தார்.
மதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத நிலையில், இன்று மதிமுக அலுவலகத்தில் வைகோவை திமுகவின் முக்கிய நிர்வாகிகள் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினர். கேகேஎஸ்எஸ்ஆர், தங்கம் தென்னரசு, ஏஆர்ஆர் சீனிவாசன், ராஜா அருள்மொழி ஆகியோர் பேச்சுவார்த்தைக்குச் சென்றிருந்தனர். இப்பேச்சுவார்த்தையில் திமுக சின்னத்தில் போட்டியிட திமுக தரப்பு வலியுறுத்தியதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, “தொகுதி பங்கீடு விவகாரத்தில் விசிகவை திமுக கவுரவமாக நடத்தியுள்ளது. 3 கட்ட பேச்சுவார்த்தைக்கு எங்களை இன்னும் திமுக அழைக்கவில்லை என்றவர், அடுத்தக்கட்ட தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை திமுகவிடமிருந்து அழைப்பு வரும்போது செல்வோம் என்றவர் தனிச்சின்னத்தில் மதிமுக போட்டியிடும் என்று சொன்னார். மேலும் கமல்ஹாசன் தலைமையிலான 3வது அணிக்கு செல்ல வாய்ப்பில்லை” என்றும் கூறினார்.