சென்னை: மதிமுக சிறுபான்மை பிரிவு செயலாளர் முராத் புகாரி காலமானார். அவரது உடல் ராயப்பேட்டையில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது, தனது 36ஆண்டு கால நண்பரை நினைத்து,   மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் (மதிமுக) துணை பொதுச் செயலாளர் மல்லை சத்யா கதறி அழுத காட்சி பெரும் சோகத்தை எற்படுத்தியது.

மதிமுகவில் சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்த முராத் புகாரி. இவர்  புகழ் பெற்ற புகாரி ஓட்டல் குழுமத்தின் குடும்பத்தை சேர்ந்த தொழிலதிபரும் கூட. சென்னையின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக திகழும் புகாரி பிரியாணி குழுமங்களின் உரிமையாளர்களில் ஒருவர். 50 ஆண்டுகள் பாரம்பரியமிக்க ஹோட்டலை சென்னையில் நடத்தி வந்தவர்.

எல்லாவற்றுக்கும் மேலாக வைகோவாலும், துரை வைகோவாலும் ‘வாங்க மாமா’ என உரிமையுடன் அன்பொழுக அழைக்கப்பெற்ற பெருமைக்கு சொந்தக்காரர் புகாரி. இஸ்லாமிய அமைப்புகளின் நிறுவனர்களுக்கும் வைகோவுக்கும் உறவுப்பாலமாக திகழ்ந்தவர். எப்போதும் சிரித்த முகத்துடன் வலம் வரக் கூடியவர் சென்னையில் மதிமுக தலைமையகத்தில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டங்களுக்கும் கணக்குவழக்கு பார்க்காமல் பக்கெட் பக்கெட்டாக பிரியாணி கொடுத்து அசத்தும், புகாரி, ரமலான் மாதம் வந்துவிட்டால்  மதிமுக சார்பில் பிரம்மாண்டமாக இஃப்தார் விழாவை நடத்தி சந்தோசப்படுவார்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சிறுபான்மை பிரிவு செயலாளராக இருந்து வரும் முராத் புகாரி,  கடந்த 2016ம் தேர்தலில் துறைமுகம் தொகுதியில் மதிமுக சார்பில் போட்டியிட்டு அமைச்சர் சேகர்பாபுவுக்கு கடும் நெருக்கடிகொடுத்தவர். இவர் நேற்று முன்தினம் காலமானார்.

இவரு மறைவுக்கு வைகோ உள்பட அரசியல் கட்சியினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.  புகாரியை மாமா என்று ஆசையோடு  அழைத்து வந்த துரை வைகோ, அவரது மரணத்தை தன்னால் ஜீரணிக்கவே முடியவில்லை என வேதனை தெரிவித்திருக்கிறார். முராத் புகாரி மறைவு பற்றி துரை வைகோ விடுத்துள்ள இரங்கலில், ”மாமா முராத் புகாரி, உடல்நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற தகவல் அறிந்து அதிர்ச்சியுற்றேன். இளம் வயதில் அவரது மரணத்தை ஏற்றுக் கொள்ள இயலவில்லை. கழகத்தின் சார்பில் மூன்று நாட்களுக்கு துக்கம் அனுசரிக்கப்படுகிறது. அனைத்து நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்படுகிறது.” என்று கூறியிருக்கிறார்.

மறைந்த முராத் புகாரியின் உடல் நேற்று ராயப்பேட்டையில் உள்ள மையவாடியில் அடக்கம் செய்யப்பட்டது. முன்னதாக,  அவரது இறுதி ஊர்வலத்தில் மதிமுக பொது செயலாளர் வைகோ கலந்து கொண்டு  உடலை தூக்கி சென்றார். அவருடன்  துரை வைகோ, மல்லை சத்யா, வாணியம்பாடி நாசிர்கான் உள்ளிட்ட பலர் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்

உண்மையான நட்பிற்கு ஏது சாதியும் மதமும் சடங்கும் ஒருபொருட்டல்ல என்பதை நிரூபிக்கும் வகையில்,  தன் 36 ஆண்டுகால ஆருயிர் நண்பன் முராத்புகாரி அடக்கம் செய்யபட்ட  இராயபேட்டை மையவாடியில் கப்ரில் (சமாதியில்) மல்லை சத்யா கண்ணீர் விட்டு கதறி அழுதார்.  இந்த காட்சி அங்கிருந்தோரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது.