நாகர்கோவில்:

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகைக்கு எதிர்த்து தெரிவித்து மதிமுகவினர் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்கள் மீது பாஜகவினர் கற்களை வீசியதால் மோதல் ஏற்படும் சூழல் உருவானது.

இதையடுத்து கருப்புக்கொடி காட்ட முயன்ற வைகோ உள்பட மதிமுகவினர் கைது செய்யப் பட்டனர். இதன காரணமாக அங்கு பரபரப்பும், பதற்றமும் நிலவி வருகிறது. காவல் துறை பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

இன்று பிற்பகல் பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி கன்னியாகுமாரி வருகை தருகிறார். அவரது வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு கொடி ஆர்ப்பாட்டம் நடை பெறும் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அறிவித்து இருந்தார்.

இநத நிலையில், மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக்கொடியுடன் வைகோ உள்பட மதிமுகவினர் கன்னியாகுமரி மாவட்ட எல்லைக்குள் புக முயன்றனர். அவர்களை காவல் துறை யினர் தடுத்து நிறுத்தினர்.

நெல்லை, கன்னியாகுமரி எல்லையான காவல் கிணறு பகுதியில் அவர் பிரதமர் மோடியை கண்டித்து போராட்டத்தில் இறங்கினார். தொண்டர்கள் முன்னிலையில் உரையாற்றிய வைகோ… மத்திய பாஜக அரசு தமிழகத்துக்கு செய்த துரோகங்கள் எவை என்று அவர் பட்டியலிட்டு ஆவேசமாக பேசினார். அப்போது மோடியே திரும்பி போ என்று மதிமுகவினர் முழக்கமிட்டனர்.

அப்போது, திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட  மதிமுகவினர் மீது பாஜகவினர் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து, அவர்களை தாக்க மதிமுகவினரும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து, காவல்துறையினர் வைகோ உள்பட மதிமுகவினர்களை கைது செய்து அங்கிருந்து  அப்புறப்படுத்தினர்.