நெட்டிசன்:

மூத்த பத்திரிகையாளர் குமரேசன் (Kumaresan Asak) அவர்களின் முகநூல் பதிவு:

தாரிகள் மோடிகள், யோகிகள், இபிஎஸ்-ஓபிஎஸ்-டிடிவிக்கள், தமிழருவிகள், துரை முருகன்கள், பிக்குகள், பாஸ்கள்… எல்லாம் அலசப்பட வேண்டிய விவகாரங்கள்தான். இன்னொரு முக்கியமான பிரச்சனை பார்வையிலிருந்து நழுவிவிட்டதே…

இரண்டு நாட்களுக்கு முன் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ இணையப் பதிப்பில் படித்த செய்தி இது. பணிகளின் நெருக்கடியில் உடனடியாக அது பற்றி அப்போது பேசமுடியவில்லை. உறுத்திக்கொண்டே இருக்கிறது.

கோயம்புத்தூர் மாநகராட்சியில் 50க்கு மேற்பட்ட பட்டதாரிகள், முதுகலைப் பட்டதாரிகள், எம்பிஏ பட்டம் பெற்றவர் உட்பட, துப்புரவுத் தொழிலாளர்களாக வேலை செய்கிறார்களாம். பரவா யில்லையே, எந்தத் தொழிலும் நல்ல தொழில்தான் என்ற விசால மனதோடு இந்த வேலைக்கு விண்ணப்பித்து வந்திருக்கிறார்களே என்று பாராட்ட நினைத்தால் கொஞ்சம் பொறுங்கள்: அவர்கள் எல்லோரும் தலித் சமூகங்களைச் சேர்ந்தவர்கள். ஏற்கெனவே இந்த வேலைகளைச் செய்து கொண்டிருந்த பெற்றோர்கள் காலமாகிவிட்டதால், கருணை அடிப்படையில் வாரிசுகளுக்கான நியமனச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்கள்.

சட்டம், காலமான ஊழியர்களின் பிள்ளைகளுக்கு வேலை என்றுதான் சொல்கிறதேயன்றி, பெற்றோர் செய்த அதே வேலை என்று சொல்லவில்லை. இவர்களது கல்வித் தகுதிக்கான பிரிவுகளில் வேலையளிக்காமல், இந்த வேலைதான் இருக்கிறது, வேண்டுமானால் செய் இல்லாவிட்டால் போய்விடு என்று கதவை நோக்கிக் கை காட்டப்பட்டதைத் தொடர்ந்து, வேறு வழியின்றி, எதிர்காலத்திலாவது வேறு வேலை தரப்படும் என்ற எதிர்பார்ப்போடு கையில் துடைப்பம் பிடித்திருக்கிறார்கள் இந்த இளைஞர்கள்.

சமூக நீதியும் சம நீதியும் நிலைநாட்டப்பட வேண்டும் என்ற லட்சியத்துடன் கொண்டுவரப்பட்ட இட ஒதுக்கீடு பாதுகாப்பில் படித்துப் பட்டம் பெற்ற இவர்களது கல்வித் தகுதி ஏளனம் செய்யப்பட்டிருப்பது, வேறு வேலைகள் காலியில்லை என்ற வெறும் நிர்வாகப் பிரச்சனைதானா? எவ்வளவு படித்தாலும் உனக்கு விதிக்கப்பட்டது இதுதான் எனும் சாதிய ஒடுக்குமுறை வன்மமா? ஒரு மாநகராட்சியில் மட்டு்ம்தான் இப்படியா அல்லது மற்ற உள்ளாட்சி அமைப்புகளிலும் இப்படித்தானா? அரசுத் துறைகளிலும் இது இருக்கிறதா?

விதியும் விவரமும் அறிந்தவர்கள் தகவல் தெரிவியுங்கள்.
வலியும் வழியும் அறிந்தவர்கள் போராடத் திரளுங்கள்…