சென்னை: சென்னை மாநகராட்சிக்கு பட்ஜெட் தயாரிக்கும் பணியில் மேயர் பிரயா மும்முரமாக ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி பட்ஜெட் தயாரிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
திமுக ஆட்சிக்கு வந்ததும், சென்னை மாநகராட்சி தேர்தல் நடத்தபட்டு, கடந்த 2022ம் ஆண்டு மேயராக பிரியா பதவி ஏற்றார். இதையடுத்து, கடந்த வருடம் மாநகராட்சி தரப்பில் வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து 2வது முறையாக இந்த ஆண்டும் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
2023-24ம் நிதியாண்டுக்கான சென்னை மாநகராட்சி பட்ஜெட்டை மேயர் பிரியா அடுத்த மாதம் தாக்கல் செய்ய உள்ளார். இதன் காரணமாக பட்ஜெட் தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால், மத்தியஅரசும் பட்ஜெட்டில் சில சலுகைகளை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், மாநில அரசு மற்றும் மாநகராட்சிகளின் பட்ஜெட்டிலும் சில சலுகைகள் வழங்கப்பட வாயப்பு இருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, மக்களுக்கான அசத்தல் அறிவிப்புகளுடன் பட்ஜெட் தயாரிப்பில் மேயர் பிரியா தீவிரமாக செயல்பட்டு வருவதாக ரிப்பன் மாளிகை தகவல் வெளியாகி உள்ளது.
பட்ஜெட் தயாரிப்பது தொடர்பாக கடந்த சில நாட்களாக மாநகராட்சி நிலைக்குழு தலைவர்கள், உறுப்பினர்களிடம் தனித்தனியே ஆலோசிது வருவதுடன், மண்டல குழு தலைவர்களிடம் வார்டு வாரியாக வரி சூல் மற்றும் செலவினங்கள் தொடர்பான கணக்கு தாக்கல் செய்ய அறிவுரை வழங்கப்பட்டு இருப்பதாகவும், மேலும் தங்களது பகுதிகளுக்கு தேவையான திட்டங்கள் பற்றியும் அறிக்கை தர வேண்டுகோள் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதுமட்டுமின்றி வரும் 25ம் தேதி அனைத்து குழுக்களுடான ஆலோசனை கூட்டம் நடத்த இருப்பதாகவும், அதைத்தொடர்ந்து பட்ஜெட் இறுதி செய்யப்பட்டு, முதலமைச்சர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி வடிவம் பெறும் என கூறப்படுகிறது.
சென்னை மாநகராட்சி தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரம், சாலை, மழைநீர் வடிகால், மேம்பாலம் உள்ளிட்டவைகளுக்கு முன்னுரிமை அளிக்க திட்டமிடப்பட்டள்ளது. இதன் மூலம் மக்களை கவரும் வகையில் புதிய அறிவிப்புகள் வெளியிட ஆலோசிக்கப்பட்டு வருகிறது.