பனாஜி,

கோவாவில் நடந்து முடிந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டது. ஆனால் காங்கிரஸூக்கு ஆட்சி அமைக்க அதிகவாய்ப்பிருப்பதாக சொல்லப்படுகிறது.

மொத்தம் 40 தொகுதிகள் கொண்ட கோவா மாநிலத்தில் ஆட்சி அமைக்க 21 எம்எல்ஏக்களின் ஆதரவு தேவை. ஆனால் நடந்து முடிந்த தேர்தலில் ஆளும் பாஜக 13 இடங்களிலும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் 17 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. மாநில கட்சிகளான கோவா பார்வர்டு கட்சி, மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சிகள் தலா 3 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளன. தேசியவாத காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் இதர கட்சிகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் எந்தக் கட்சிக்கும் கிடைக்காத காரணத்தால் அம்மாநிலத்தில் தொங்கு சட்டப்பேரவை அமைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தேர்தலில் முதல்முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி ஒரு தொகுதியில் கூட வெற்றிப் பெறவில்லை.

கடைசி நிலவரப்படி கோவா தேர்தலில் பாஜகவுக்கு 32.5 சதவித வாக்குகள் கிடைத்துள்ளன. அதை தொடர்ந்து காங்கிரஸ் 28.4 சதவிதமும், மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி 11.3 சதவிதமும், ஆம் ஆத்மி 6.3 சதவித வாக்குகளும் பெற்றுள்ளன.

கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் அம்மாநில முதலமைச்சர் லஷ்மிகாந்த் பர்சேகர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் தயானந்த் சோப்டேவிடம் 5 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.