சென்னை: மாரிதாசுக்காக கவர்னரை சந்திக்கும் பாஜகவினர் தமிழக மீனவர்களுக்காக குரல் எழுப்பாதது ஏன்? மாரிதாஸ் என்ன சுதந்திர விடுதலை போராளியா? பாஜகவினருக்கு திருமுருகன் காந்தி கேள்வி எழுப்பி உள்ளார்.

இலங்கை கடற்படையினரால், தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்களின் கைது  எண்ணிக்கை 68ஆக அதிகரித்துள்ளது. இது தொடர்பாக ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள்  காலவரையற்ற போராட்டத்தை நடத்தி வருகின்றனர். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும், இது தொடர்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். நாடாளுமன்றத்திலும் திமுக எம்.பி.க்கள் குரல் எழுப்பி உள்ளனர். காங்கிரஸ், அதிமுக உள்பட தமிழக அரசியல் கட்சிகளும், தமிழக மீனவர்களை விடுவிக்கக் கோரி மத்தியஅரசை வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், மாநில பாஜகவினர் மட்டும் இதுவரை தமிழக மீனவர்களை விடுதலை  செய்ய வலியுறுத்தி குரல் எழுப்பவில்லை. இது சந்தேகங்களை எழுப்பி உள்ளது. சாதாரண யுடியூபர் மாரிதாஸ் உள்பட அதிமுகவினர் மீதான ரெய்டுகளுக்கு குரல் எழுப்பும் பாஜகவினர், இதற்கு குரல் எழுப்பாதது தமிழக மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து கேள்வி எழுப்பி உள்ள மே 17 இயக்கத் தலைவர் திருமுருகன் காந்தி, மாரிதாஸ் கைது என்றதும் ஆளுநரை சந்திக்கும் பாஜகவினர், மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள் இதற்காக ஏன் ஆளுநரை சந்திக்கவிலை…? என கேள்வி எழுப்பியதுடன்,  மாரிதாஸ் என்ன சுதந்திர விடுதலை போராளியா என்ன…? என தெரிவித்துள்ளார்.