சேலம்: சுதந்திர போராட்ட தியாகி கர்மயோகி T.M. காளியண்ண கவுண்டர் முதலாம் ஆண்டு நினைவேந்தல் விழா வரும் 29ந்தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (ஓபிசி) மாநில துணைத் தலைவர் நாமக்கல் டாக்டர் செந்தில், காங்கிரஸ் கட்சியினர் மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
சுதந்திரப் போராட்ட வீரரும் இந்திய அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினரும் முதுபெரும் காங்கிரஸ் தலைவருமான டி.எம்.காளியண்ணன் தனது 101வது வயதில் கடந்த ஆண்டு மே 28ந்தேதி அன்று காலமானார். டி.எம்.காளியண்ணன் திருச்செங்கோடு அருகே குமாரமங்கலத்தில் 1921ம் ஆண்டு பிறந்தார். சேலம் மாவட்டம் ஒருங்கிணைந்த மாவட்டமாக இருந்தபோது 50க்கும் மேற்பட்ட கிராமங்களை உள்ளடக்கிய குமார மங்கலம் போக்கம்பாளையம் ஜமீன் குடும்பத்தைச் சேர்ந்தவர்தான் இந்த டி.எம்.காளியண்ணன்.
சென்னை லயோலா மற்றும் பச்சையப்பா கல்லூரியில் உயர்கல்வியைப் படித்த அவர், கல்லூரி காலத்திலேயே தேசப்பற்றுடன் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். காந்திய வழியைப் பின்பற்றிய அவர், இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, இந்தியாவின் முதல் சட்ட அமைச்சர், அரசியல் சாசன சிற்பி அம்பேத்கர், வல்லபாய் பட்டேல், ராஜாஜி, காமராஜர் போன்ற தலைவர்களுடன் இணைந்து செயல்பட்டார்.
இந்தியா சுந்தந்திரம் அடைந்தபின் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட இந்திய அரசியல் நிர்ணய சபையில், அன்றைக்கு சென்னை மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அரசியல் நிர்ணய சபை உறுப்பினர்கள் 40 பேர்களில் ஒருவராக தேர்வு செய்யப்பட்டார். அந்த வகையில், அரசியல் நிர்ணய சபையின் உறுப்பினர்களில் உயிருடன் இருந்த கடைசி உறுப்பினர் டி.எம்.காளியண்ணன்.
சுதந்திரப் போராட்டத்தின் வழியாகவும், காந்தியவாதி என்ற வகையிலும் காங்கிரஸ் கட்சியில் செயல்பட்ட தியாகி டி.எம்.காளியண்ணன், 1952–ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தில் ராசிபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைடுத்து, 1957–1962, 1962–1967 திருச்செங்கோடு எம்.எல்.ஏ-வாக இருந்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மேலவை இருந்தபோது 2 முறை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். அதன் பிறகு 10 ஆண்டுகளுக்கு மேல் சேலம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்துள்ளார். இவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத்தலைவர், பொருளாளர் போன்ற பதவிகளையும் வகித்துள்ளார். முதுமை காரணமாக டி.எம்.காளியண்ணன் 2000க்கு பிறகு அரசியலை விட்டு விலகி ஓய்வெடுத்து வந்தார்.
அவரது முதலாண்டு நினைவேந்தல் விழா வரும் 29ந்தேதி அன்று காலை 10மணி அளவில் நாமக்கல் – கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவின் செயலரும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி (ஓபிசி) மாநில துணைத் தலைவர் நாமக்கல் டாக்டர் செந்தில் செய்து வருகிறார். விழாவில் கலந்துகொள்ள காங்கிரஸ் கட்சியினர், பொதுமக்கள என அனைத்து தரப்பினருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வீடியோ பதிவு மூலம் வெளியிட்டுள்ள அழைப்பிதழில், நமது மண்ணின் மைந்தர் தன்னலமற்ற சுதந்திர போராட்ட தியாகியும், ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் தந்தையும், காவிரித் தாயின் பிதாமகன் என விவசாயிகளால் நேசிக்கப்பட்டவரும், மேற்கு தமிழகத்தின் கல்வி கண்களை திறந்தவரும், (2000 பள்ளிக கூடங்கள்), தமிழகத்தின்பெருமைகளை நாடறிய செய்தவருமான கர்மயோகி T.M. காளியண்ண கவுண்டர் அவர்களது முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு வரும் ஞாயிற்றுக்கிழமை மே 29ம் தேதி காலை 10.05 மணிக்கு நாமக்கல் – பரமத்தி சாலையில் உள்ள கொங்கு வேளாளர் திருமண மண்டபத்தில் நடக்கிறது.
அதுசமயம், நமது சொந்தங்களாகிய நீங்கள் அனைவரும் நேரில் வந்திருந்து அன்னாரது தியாகங்களையும் தொண்டுகளையும் நினைவு கூர்ந்து அவரைப் பெருமைப் படுத்துவோம். குறுகிய கால அவகாசம் மட்டுமே இருப்பதால் நேரில் வந்திருந்து அழைக்க முடியாத சூழலில் இந்த அழைப்பையே நேரில் வந்து அழைத்ததாகக் கருதி நிகழ்வில் கலந்து கொண்டு உங்களது அஞ்சலியை காணிக்கையாக்கும்படி கேட்டுக் கொள்கிறோம் என தெரிவித்து உள்ளார்.
விழா நடைபெறும் இடம் – நேரம்:
டாக்டர் செந்தில் TNCC-(OBC) State VP.
மற்றும் செயலர் விழாக்குழு.
நாள்: *ஞாயிற்றுக்கிழமை மே 29ம் தேதி *
நேரம்: காலை 10.05 மணி
இடம்: நாமக்கல் – கொங்கு வேளாளர் திருமண மண்டபம்.