சென்னை: பிரதமர் மோடி இன்று சென்னை வருவதையொட்டி, பல பகுதிகளில்  போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் நெடுஞ்சாலைத்துறை, ரயில்வே துறை உள்பட சுமார்  33 ஆயிரத்து 400 கோடி மதிப்பிலான  திட்டங்களை தொடங்கி வைக்க பிரதமர் மோடி இன்று பிற்பகல் சென்னை வருகிறார்.  சென்னை வரும்  பிரதமருக்கு  தமிழக அரசு சார்பில் பலத்த வரவேற்பு அளிக்கப்பட வுள்ளது. அதைத்தொடர்ந்து, சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

பிரதமர் வருகையையொட்டி சென்னையில் டிரோன் பறக்க தடை விதிக்கப்பட்டு உள்ளதுடன்,   சுமார் 22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.  இந்த நிலையில் பிரதமர் மோடியின் வருகை காரணமாக  சென்னையில் இன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து சென்னை மாநகர போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மாண்புமிகு பாரதப்பிரதமர் அவர்கள் பல்வேறு திட்டங்கள் நாட்டுக்கு அர்ப்பணிக்க மற்றும் ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட 26.05.2022 அன்று சென்னைக்கு வருகைதர உள்ளார்.

இதற்கான விழா பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற உள்ளது. பிரதமரின் வருகையையொட்டியும் விழா நடைபெறும் அதை சுற்றி உள்ள சாலைகளில் குறிப்பாக ஈ.வே.ரா சாலை,  தாஸபிரகாஷ் முதல் சென்னை மருத்துவ கல்லூரி சந்திப்பு வரை மாலை 3 மணி முதல் இரவு 8 மணி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

பொதுவாக அண்ணாசாலை, SV பட்டேல் சாலை மற்றும் ஜிஎஸ்டி சாலைகளில் போக்குவரத்து மெதுவாக இருக்கும், ஆகையால் வாகன ஓட்டிகள் தங்களது பயணத்தை இந்த சாலைளை தவிர்த்து மாற்றுவழியில் செல்ல திட்டமிடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.